Published : 15 Jul 2024 03:21 PM
Last Updated : 15 Jul 2024 03:21 PM

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் பழைய வாகனங்களை மாற்ற கோரிக்கை

கோப்புப் படம்

நெடுஞ்சாலைத் துறையை மறுசீரமைக்கும் பணியில் தீவிரம் காட்டும் அரசு, துறை பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்களையும் மாற்றியமைக்க மேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை 1946-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமானம், தேசிய நெடுஞ்சாலைத் துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டங்கள் என 10 அலகுகள் துறையின் கீழ் உள்ளன. நெடுஞ்சாலைத் துறை மாநிலம் முழுவதும் 70,566 கி.மீ. சாலைகளை பராமரித்து வருகிறது. சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்துறையை மறுசீரமைப்பு செய்ய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஒரே அலகின் கீழ் 2 அலகுகளை கொண்டு வருவது மேம்பாலங்களை பராமரிக்க மட்டும் புதிய அலகுகளை உருவாக்குவது உட்பட செயல்பாட்டில் உள்ள அலகுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்போல் தமிழ்நாடு அரசும் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை உருவாக்க ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் (அன் ஸ்கில்டு) சங்கம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையை மறுசீரமைக்கும் பணிக்காக அரசாணை வரும் ஆக.1-ம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறையை மறுசீரமைக்கும் நேரத்தில் அதில் பயன்பாட்டில் உள்ள வாகனங்களையும் மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

குமார்

இதுகுறித்து அகில இந்திய அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் குமார் கூறியதாவது: தலைமை பொறியாளர் அலுவலகம் உட்பட மாநிலம் முழுவதும் சுமார் 45 கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் மற்றும் சிறப்புகோட்ட பொறியாளர் அலுவலகங்கள் மாநிலம் முழுவதும்நெடுஞ்சாலைத்துறையின் கீழ்செயல்படுகின்றன.

இவற்றின் கீழ், 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அலுவலக பயன்பாட்டில் உள்ளன. அதில்200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்கெனவே கழிவு நீக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளவை என சக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இவை தவிர துறை சார்ந்த அலகுகளின் பயன்பாட்டில் உள்ள லாரிமற்றும் ரோடு ரோலர் என 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் உரிய பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் ஓட்டுநர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிய வேண்டியுள்ளது.

இதை, அரசு கவனித்து நெடுஞ்சாலைத்துறை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அரசு துறைகளில், கழிவு நீக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் விவரங்களை கேட்டறிந்து அவற்றை மாற்றி புதிய வாகனங்கள் கொள்முதல் செய்து தர முன்வர வேண்டும். வாகனங்கள் இல்லாததால் பல பொறியாளர்கள் சொந்த வாகனத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் பல ஓட்டுநர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓட்டுநர்கள் வேலை இழப்பதை தடுக்க அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x