Published : 15 Jul 2024 02:28 PM
Last Updated : 15 Jul 2024 02:28 PM
சென்னை: "அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவியில், "தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 8000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கக் கூடிய, காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய செயலை செய்வதற்கான கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையேற்று நடத்துகிறார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உழவர் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை அழைத்து கலந்தாய்வு நடத்துகிறார்.
அதேபோல், தமிழகத்திலும் காவிரி பிரச்சினை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றால்தான் அதற்கு முக்கியத்துவம் கிடைக்கும். காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டால்தான் காவிரி விவகாரத்தில் தமிழகம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்துக்கும் மற்றவர்களுக்கும் காட்ட முடியும்.
எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும்; தமிழகத்தின் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் போன்ற நோக்கங்களைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டம்: முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், "காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு அளித்த இறுதி தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத்தின் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பையும் செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த அமைப்புகள் 2018 ஜூன் முதல் செயல்பட்டு வருகின்றன.
தற்போதைய தென்மேற்கு பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நிலவரத்தை கருத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர்மேலாண்மை ஆணையம் ஆகியவை தமிழகத்துக்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரை கணக்கிட்டு, ஜூலை 12 முதல் 31-ம் தேதி வரை தினசரி ஒரு டிஎம்சி விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த ஆணையை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி நீரை விடுவிக்காத கர்நாடக அரசின் செயல் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும். இவ்வாறு தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது.
காவிரி நீரைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சித்தலைவர்களின் கூட்டத்தை நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்ட உத்தரவிட்டுள்ளேன். கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைள் குறித்து முடிவெடுக்கப்படும்." என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...