Published : 15 Jul 2024 05:15 AM
Last Updated : 15 Jul 2024 05:15 AM
சென்னை: கொலை வழக்கில் போலீஸில் சரணடைந்தவர் ஏன் தப்பிக்க முயற்சிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைகளை மறைக்க என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பதாகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்ற ரவுடியை, போலீஸார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். போலீஸ் காவலில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக் கொல்ல வேண்டிய தேவை என்ன வந்தது?
கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் போலீஸார் அழைத்துச் சென்றனரா, யாரைக் காப்பாற்ற இந்த என்கவுன்ட்டர், சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்லஎன ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் சந்தேகிக்கும் நிலையில், போலீஸாரின் இந்த நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். கொலை செய்ததாக சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பதே பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. மேலும் இந்த படுகொலையில், திமுகவினர் 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பதால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் தான் செல்கிறதா?
பாமக தலைவர் அன்புமணி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த எதிரிகள் போலீஸ் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, அவர்களில் சிலர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற ஐயம் எழுந்தது. இப்போது அந்த ஐயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூறப்படும் காரணங்களும் நம்பும்படியாக இல்லை.
இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றவும், உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ என்றஐயம் எழுகிறது. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி திருவேங்கடம், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. அதில் சரணடைந்த கைதியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. கொலை வழக்கில்சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிக மாகிறது. இதேபோல, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...