Published : 15 Jul 2024 06:10 AM
Last Updated : 15 Jul 2024 06:10 AM
சென்னை: ஆலந்துார், திருமங்கலம், கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 20 சிற்றுந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னையில் விமான நிலையம் - விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்ட்ரல் வரையும் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க, பல்வேறு முயற்சிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்துசெல்லும் பயணிகளின் வசதிக்காக, இணைப்பு வாகன சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆலந்தூர், கிண்டி,டி.எம்.எஸ்., அரசினர் தோட்டம்,வண்ணாரப்பேட்டை, திருமங்கலம், சைதாப்பேட்டை, எழும்பூர்,சென்ட்ரல் உட்பட பல்வேறுமெட்ரோ ரயில் நிலையங்களைஇணைக்கும் வகையில் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
இருப்பினும், அதிகரித்து வரும் பயணிகள்தேவைக்கு ஏற்ப, சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகத்திடம் மெட்ரோ ரயில் நிறுவனம் பட்டியலை வழங்கி உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்நிலையங்களில் இருந்து இதர பேருந்து, ரயில் நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில் இணைப்பு வாகனவசதி அவசியமாகிறது. போதியஇணை வாகன வசதி இருந்தால்தான் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும், அதிகரிக்கும்.
எனவே, ஆலந்துார், கிண்டி,திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் சிற்றுந்துகளை இயக்க வேண்டும். இதுபோல, வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இருந்து கூடுதல் சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment