Published : 14 Jul 2024 04:32 PM
Last Updated : 14 Jul 2024 04:32 PM

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் - கடும் அவதிக்குள்ளான சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் சீனிவாசபுரம்- மூஞ்சிக்கல் இடையே போக்குவரத்து நெரிசலால் அரைமணிநேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் காத்திருந்த வாகனங்கள்.

திண்டுக்கல்: கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அரைமணிநேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வாரவிடுமுறை தினங்களில் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் இன்று காலை கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததால் காலை முதலே நகரின் பல பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இன்று காலை கொடைக்கானலின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் ஏரிச்சாலை வரை வாகனங்கள் ஊர்ந்தே சென்றன. இதற்கு இடைப்பட்ட பகுதியான சீனிவாசபுரம் முதல் மூஞ்சிக்கல் வரை வாகனங்கள் நகராமல் அரைமணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தன. சுற்றுலாப் பயணிகள் காருக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. சீனிவாசபுரத்தில் இருந்து பேருந்துநிலையம் வரை உள்ள 4 கி.மீ., தூரத்தை கடக்க ஒரு மணிநேரத்திற்கு மேலாகியது.

நகரில் போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ள போலீஸார் போதிய அளவு இல்லை. கொடைக்கானல் அரசு பள்ளி அருகே சாலையில் தன்னார்வலர் ஒருவர் நின்றுகொண்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து ஏரிச்சாலையில் இரண்டு போலீஸ்காரர்கள் மட்டும் போக்குவரத்தை சரிசெய்து கொண்டு இருந்தனர். போதிய போலீஸார் இல்லாததால் போக்குவரத்தை சீர் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

வாரவிடுமுறை தினங்களில் கூடுதல் போலீஸாரை கொடைக்கானலுக்கு அனுப்பி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில், உள்ளூர் தன்னார்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. நகருக்குள் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தியிருந்ததும் ஒரு காரணமாக இருந்தது.

நகருக்குள் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தீர்க்கவே போலீஸார் இல்லாதநிலையில், 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள சுற்றுலாத்தலங்களான மோயர்பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், தூண்பாறை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை அங்கிருந்த சிலர் தாங்களே முன்வந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முதற்கட்டமாக சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதை போலீஸார் கட்டுப்படுத்தவேண்டும். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் நடவடிக்கையில் இறங்கவேண்டும். மூன்றாவதாக பன்னடுக்கு வாகன நிறுத்தம் விரைவில் அமைக்கப்படவேண்டும். இந்த மூன்றும் நடைபெற்றதால் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வுகாணப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்ல உள்ளூர் மக்களும் அவதிக்குள்ளாவது தவிர்க்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x