Published : 14 Jul 2024 03:54 PM
Last Updated : 14 Jul 2024 03:54 PM
சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏவின் கீழ் செயல்படுத்தப்படும் 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று களஆய்வு செய்தார்.
அதன்படி, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, எம்.கே.பி. நகர், சென்ட்ரல் அவென்யூ சாலையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சமுதாய நலக்கூடம் அமையவுள்ள இடத்தினை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, "வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிகள் குறித்தும், குறிப்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் குறித்தும் தொடர் ஆய்வு நடைபெற்று வருகிறது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிகளை நல்ல தரத்துடன் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மேற்கொள்ளப்பட இருக்கின்ற பணிகள் அந்த பணிகளால் அந்த பகுதி மக்களுக்கு ஏற்படும் நன்மைகள், அதேபோல் அந்த பகுதி மக்களுடைய அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா என்று தொடர்ந்து களத்திற்கு சென்று ஆராய்ந்து அந்த திட்டங்களையும் விரைவாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் 2024-25ம் ஆண்டு அறிவித்த அறிவிப்புகளின் திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும் 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டப் பணிகளை நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். முதல் பணியாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் புதிதாக ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வாரியத்திற்கு சொந்தமான 8 கிரவுண்டு நிலப்பரப்பில் சமுதாயக்கூடம், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு முழுவதுமாக இந்த பகுதியில் புதிதாக திருமண மண்டபம் போன்றவை கட்டுவதற்குண்டான ஆய்வினை மேற்கொண்டோம்.
அதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் அது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் இருப்பதால் அந்த பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கின்றோம்.
அதை தொடர்ந்து, ஆர். கே. நகர் பகுதியில் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கோரிக்கையும் நேரடியாக சென்று இன்றைக்கு கள ஆய்வு செய்தோம். அதிலும் கிட்டத்தட்ட சுமார் 10 கிரவுண்டுக்கு மேலாக இடம் இருக்கின்றது. அதற்கும் சாத்திய கூறுகள் இருப்பதால் அந்த பணியையும் விரைவாக மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றோம்.
மூன்றாவதாக திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர், மண்டல குழு தலைவரும் இருவரும் வைத்த கோரிக்கை ஏற்று திருமண மண்டபம் ஒன்று கட்டுவதற்கு உண்டான இடத்தை ஆய்வு செய்தோம். சென்னை பெருநகர மாநகராட்சியின் சொந்தமான இடம், அந்த இடத்திலும் கட்டுவதற்கு உண்டான சாத்திய கூறுகள் இருப்பதால் அதற்கும் ஒப்புதல் அளித்து இருக்கின்றோம்.
நான்காவதாக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சமுதாயக் கூடத்தை வறுமை கோட்டிற்கு கீழே வசிக்கின்ற மக்கள் பயன்படுகின்ற அளவிற்கு கட்டித் தர வேண்டும் என்று கேட்டு கொண்டு இருந்தார். அதையும் தற்பொழுது துறையோடு ஆய்வு செய்து இருக்கின்றோம், சாத்திய கூறுகள் இருப்பதால் இந்த திட்டத்தையும் இந்த ஆண்டு எடுத்துக் கொள்வதற்காக ஏற்கனவே அறிவிப்பில் உள்ள திட்டம் என்பதால் வடசென்னை வளர்ச்சி பகுதியிலே இருக்கின்ற திட்டத்தால் இதையும் செயல்படுத்த இருக்கின்றோம்.
இதைத்தொடர்ந்து வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், ஒரு பூங்கா கேட்டிருக்கின்றார். அதையும் ஆய்வு செய்ய இருக்கின்றோம். தொடர்ந்து இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதால் கிடைக்கப்பெறுகின்ற நன்மைகளின் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தவும், ஏற்படுத்தப்படுகின்ற கட்டமைப்புகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையிலும் அமைப்பதற்கு பேருதவியாக இருப்பதால் இந்த ஆய்வுகளை தொடர்ந்து செயல்படுத்தப்படும்." என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT