Published : 14 Jul 2024 03:05 PM
Last Updated : 14 Jul 2024 03:05 PM

தமிழகத்தில் ரூ.4,730 கோடி அளவில் மணல் கொள்ளை: ஆர்.பி. உதயகுமார் ‘பகீர்’ குற்றச்சாட்டு

ஆர்.பி.உதயகுமார் | கோப்புப் படம்.

மதுரை: ''தமிழகத்தில் ரூ.4,730 கோடி அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதுவரை முதல்வர் வாய் திறந்து விளக்கம் சொல்லவில்லை'' என்று முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருமங்கலம் அருகே கப்பலூர் திடல் முன்பு முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ நீதிபதி, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் பலியான சம்பவம் நடைபெற்றது. திமுக ஆட்சியின் அலட்சிய போக்கே இதற்குக் காரணம். ஏற்கெனவே மரக்காணத்தில் 22 பேர் பலியான சம்பவத்தில் பாடம் கற்றுக்கொண்டு முதல்வர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கோட்டை விட்டுவிட்டார். தற்பொழுது கூட விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயத்தால் ஒருவர் பலியாகியுள்ளார். 2 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

கள்ளச்சாராயத்தை இன்னும் ஒழிக்க முடியவில்லை. கள்ளச்சாராயத்தை ஒழித்து விடுவேன் என்று முதல்வர் வாயால் வடை சுடுவது போல் சொல்லாமல் செய்து காட்ட வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத்தான் காவல்துறை உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை என செய்திகள் வராத நாளே இல்லை. ஆனால் இன்றைக்கு காவல்துறை விஐபி தரவரிசை போல 4,000 ரவுடிகளை ஏ,பி,சி, என்று தரம் பிரித்து பட்டியல் வெளியிடுகிறார்கள்.

உயர் அதிகாரிகள் இடமாற்றத்தால் பிரச்சினை தீர்ந்து விடாது. காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமல் சுதந்திரமாக செயல்படவிட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும். ஐந்து மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது. 190 ஹக்டேரில் 28 இடங்களில் மணல் அள்ளிக் கொள்ள அனுமதி பெறப்பட்டது. ஆனால் 987 ஹக்டேர் மணல் அள்ளி உள்ளார்கள்.

மணல் அள்ளுவதற்கு முன்பும், மணல் அள்ளப்பட்ட பின்பும் எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களை அமலாக்கதுறை வெளியிட்டுள்ளது. இது சம்பந்தமாக 25.4.2024 அன்று கரூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அமலாக்கத்துறை கணக்கின்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சட்ட விரோதமாக மணல் அள்ளிய மதிப்பு ஏறத்தாழ ரூ.4,730 கோடி ஆகும். ஆனால் அரசுக்கு வருவாய் 36.45 கோடி தான் செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை நடந்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை இந்த விவகாரத்தில் வாய்திறந்து விளக்கம் சொல்லவில்லை.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x