Published : 14 Jul 2024 12:36 PM
Last Updated : 14 Jul 2024 12:36 PM
சென்னை: வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை நாம் மீண்டும் வென்றெடுக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அனைவரும் வன்னியர் சங்கத்தின் 45 ஆம் ஆண்டு விழாவில் ஏற்றுக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு கிடந்த சமூகத்தை உயர்த்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட வன்னியர் சங்கம், வரும் 20 ஆம் நாள் அதன் 44 ஆண்டு கால செயல்பாடுகளை நிறைவு செய்து, 45 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்னியர் சங்கத்தின் 44 ஆண்டு கால பயணம் என்பது மலர்ப் போர்வைகளால் ஆனது அல்ல... மாறாக குத்திக் கிழிக்கும் முள்கள், கால் வைத்தால் உடலையே சிதற வைக்கும் கண்ணிவெடிகள் நிறைந்த பாதையில் தான் நாம் பயணித்து வந்திருக்கிறோம். வன்னியர் இட ஒதுக்கீடு என்ற நமது இலக்கை வென்றெடுப்பதற்கான எஞ்சிய பயணமும் இனிமையானதாக இருக்காது. சமூகநீதிக்கு சமாதி கட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர்களிடம் தான் நாம் போராடி நமக்கான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டியுள்ளது. இதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நாம் தயாராக வேண்டும்.
தமிழ்நாட்டின் மாபெரும் சமூகம் என்றால் அது வன்னியர்கள் தான். ஆனால், அந்த சமூகத்திற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்க ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. தங்களை ஆட்சி அதிகாரம் என்ற பல்லக்கில் வைத்து தூக்கி சுமக்கும் சமூகமாகவே வன்னியர்கள் இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். அதிகாரத்தைக் கொடுத்தால் அவர்கள் அடங்கிப் போக மாட்டார்கள் என்பதாலேயே நம்மை பிரித்தாண்டு, வாக்குப்போடும் சமூகமாகவே வைத்திருந்தார்கள்.
வேளாண்மை வேலைக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்; சாலை போட அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்; வீடு கட்ட, காடு திருத்த, கிணறு வெட்ட, காவல் காக்க அனைத்துக்கும் அவர்களை பயன்படுத்தி, அவர்களின் உழைப்பைச் சுரண்டலாம்; ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும் அவர்களுக்கு கல்வியை வழங்கி விடக்கூடாது என்பது தான் ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.
அதனால் குடிசை வீடுகளில் வெளிச்சமில்லா வாழ்க்கையை வாழ நாம் பழகிக் கொண்டோம். பேனா பிடிக்க வேண்டிய கைகள் மண்வெட்டியும், கடப்பாரையும் பிடித்து காய்த்துப் போயின. பணமும், சூதும், வஞ்சமும், படைத்த ஆட்சியாளர்களால் சுரண்டப்படுகிறோம் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாமல் தான் நாம் முடங்கிக் கிடந்தோம்.
அப்படி சுரண்டப்பட்ட சமூகத்தில் தான் ஒரு வேளாண் குடும்பத்தில் நானும் பிறந்தேன். அணிந்து கொள்வதற்கு நல்ல ஆடை கூட இல்லாத நிலையில், சாணி சட்டி தூக்கியும், கூலி வேலை செய்தும், மாணவர்களுக்கு டியூசன் நடத்தியும், பகுதி நேரமாக கணக்கெடுப்புப் பணிகளைச் செய்தும் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தான் மருத்துவம் படித்தேன். படித்து முடித்தவுடன் நல்ல ஊதியத்துடன் அரசு வேலை கிடைத்தது.
அரசு மருத்துவமனைக்கு வெளியில் என்னிடம் மருத்துவம் பார்க்க பெரும் கூட்டம் காத்துக் கிடந்தது. எனக்கு முன் இருந்த அந்தப் பாதையில் நான் பயணித்திருந்தால் ஒளிமயமான எதிர்காலம் எனக்கு கிடைத்திருக்கும். ஆனால், எனக்கு அந்தப் பாதையில் பயணிக்க விருப்பம் இல்லை; மாறாக, முடங்கிக் கிடந்த பாட்டாளி மக்கள் அனைவருக்கும் அந்தப் பாதை அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். அதன் பயனாகவே நமது வன்னியர் சங்கம் உருவானது.
வன்னியர் சங்கத்தை தோற்றுவித்தவுடனேயே பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் எனது பின்னால் அணி திரண்டுவிடவில்லை. மக்கள் நம்மைத் தேடி வரமாட்டார்கள்; நாம் தான் மக்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். வாரம் முழுவதும் மருத்துவராக பணியாற்றி ஈட்டிய பணத்தை எடுத்துக் கொண்டு, வார இறுதி நாட்களில் ஊர் ஊராக பயணிப்பேன்.
பல நேரங்களில் பேருந்துகளில் அமருவதற்கு இடம் இல்லாமல் நின்று கொண்டே உறங்கிய நிலையில் பயணித்த நாள்கள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பேருந்து, மகிழுந்து, மாட்டு வண்டி என கிடைத்த வாகனங்களில் சென்று பாட்டாளி மக்களை சந்தித்தேன். அவ்வாறு சந்தித்துப் பேசி தான் அவர்களை மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டத்திற்கு தயார்படுத்தினேன்.
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி, மாநாடு, பேரணி, உண்ணாநிலை, மனு கொடுத்தல் என முதற்கட்டமாக நாம் நடத்தியப் போராட்டங்களை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ள வில்லை. 1986ம் ஆண்டில் முதல்கட்டமாக ஒரு நாள் சாலை மறியல் போராட்டமும், இரண்டாம் கட்டமாக ஒரு நாள் தொடர்வண்டி மறியல் போராட்டமும் நடத்திய பிறகு தான் தமிழகம் நம்மைத் திரும்பிப் பார்த்தது. ஆனாலும், நமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
ஆனாலும், அன்றைய அரசு நமது கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட முன்வராத நிலையில் தான் நமது சமூகநீதி நாளான 17.09.1987 அன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்தோம். அதன்படி தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகள் நமது சொந்தங்களின் மார்புகளில் பாயத் தொடங்கின.
பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பாட்டாளிகளும் துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கியும், காவல்துறை தாக்குதலிலும் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் நம்மை அழைத்துப் பேசி இட ஒதுக்கீடு வழங்க முன்வந்தாலும் கூட, அடுத்த சில நாட்களில் அவர் காலமானதால் நமது தனி இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 1989 தேர்தலில் வென்று ஆட்சியமைத்த கருணாநிதி, என்னை அழைத்துப் பேசினார். வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் வலியுறுத்திய நிலையில், அவரோ வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீட்டை வழங்கினார். தியாகம் செய்து பெற்ற அந்த இட ஒதுக்கீட்டால் நமக்கு போதிய பயன் கிடைக்கவில்லை, பிற சாதிகள் தான் பெரும் பயன் பெற்றனர்.
அதனால் தான், முந்தைய அதிமுக ஆட்சியில் இரண்டாவது சமூகநீதிப் போராட்டத்தை நடத்தி, வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். ஆனால், சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்கு காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க திமுக அரசுக்கு மனம் வரவில்லை. அதற்காக இல்லாத காரணத்தை தேடுகின்றனர்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலினை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்; எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதல்வரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர். பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 50 முறைக்கும் கூடுதலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போதெல்லாம் இன்னும் சில வாரங்களில் இட ஒதுக்கீடு வழங்குகிறோம் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறுகிறார். அதன் நோக்கம் வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்கக்கூடாது என்பதைத் தவிர வேறு என்ன?
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று ஆட்சியாளர்கள் சொன்னால், அதைக் கேட்டு அடங்கிப் போகும் இனம் அல்ல நாம். நமக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று ஆட்சியாளர்கள் சொல்வதற்கு அது ஒன்றும் அவர்கள் குடும்பத்தின் சொத்து அல்ல. அடிக்கும் வேகத்திற்கு ஏற்ப பந்து வேகமாக எழுவது போன்று நமக்கு எதிரான அடக்குமுறைகளும், துரோகங்களும் அதிகரிக்கும் போது தான் நாம் இன்னும் வேகமாக எழுந்து போராடுவோம். அதற்கான தருணமும் வந்து விட்டது.
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி தொடங்கிய சமூக நீதிப் போராட்டத்தில், ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதற்கு முன்பு எத்தகைய நிலையில் நாம் இருந்தோமோ, அதே போன்ற சூழலில் தான் நாம் இப்போதும் இருக்கிறோம். அப்போது நடத்தப்பட்டதை விட மிகப்பெரிய சமூகநீதிப் போரை நாம் நடத்தியாக வேண்டும்; அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை நாம் மீண்டும் வென்றெடுக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அனைவரும் வன்னியர் சங்கத்தின் 45 ஆம் ஆண்டு விழாவில் ஏற்றுக்கொள்ள வேண்டிய உறுதிமொழி ஆகும்.
வன்னியர் சங்கத்தின் ஆண்டு விழாவான வரும் 20 ஆம் நாள் நீங்கள் அனைவரும் அத்தகைய உறுதிமொழியை ஏற்றுக்கொள்வதுடன், ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் வன்னியர் சங்கக் கொடியேற்ற வேண்டும்; போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டின் சிறப்புகள், அதற்காக நாம் செய்த தியாகங்கள் பற்றி இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment