Last Updated : 14 Jul, 2024 11:07 AM

1  

Published : 14 Jul 2024 11:07 AM
Last Updated : 14 Jul 2024 11:07 AM

விக்கிரவாண்டியில் பாமக வீழ்ந்ததற்கு என்ன காரணம்? | HTT Explainer

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிச் செய்தியை கேட்ட தும், ஆடிப்பாடி ஆர்ப்பரிக்கும் திமுக தொண்டர்.படம்: எம்.சாம்ராஜ்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்பார்த்தை விட அதிக வித்தியாசத்தில் ஆளும் கட்சிக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றியை தேடி தந்திருக்கிறது.

இந்த தேர்தல் முடிவு குறித்துஅதிமுக, திமுக, பாமக நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்தது:

திமுக சார்பில் களமிறக்கப்பட்ட 25 அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ‘சிறப்பாக’ செயல்பட்டனர் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பிரச்சாரம் செய்ய வந்த சில அமைச்சர்களுக்கும் பொன்முடிக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் பொன்முடிக்கு எதிராக அரசியல் செய்யும் லட்சுமணன் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால், அவரை பெரும்பாலான திமுகவினர் ஏற்கவில்லை.

கொடி பிடித்து கோஷமிட்ட தொண்டனாக இருந்து, படிப்படியாக வளர்ந்த அன்னியூர் சிவா இத்தேர்தலில் வெற்றி பெற்றால் பொன்முடிக்கு எதிராக அரசியல் செய்ய வாய்ப்புண்டு என்ற நினைப்பிலேயே தேர்தல் பணியாற்றினர். ஆனாலும், திமுக அதன் பிரச்சார வியூகத்தால் வெற்றி பெற்றிருக்கிறது.

பாமக சார்பில் நாள்தோறும் அன்புமணி ராமதாஸின் பிரச்சாரமும், வழக்கறிஞர் பாலுவின் தேர்தல் வியூகமும் திமுகவினரை அசால்டாக இருக்க விடவில்லை. அதனால் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினர் திமுகவை சகட்டுமேனிக்கு விமர்சித்தனர். இதை அக்கட்சியின் மீதான அபிமானம் கொண்டவர்கள் கூட ரசிக்கவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

“இத்தேர்தலில் பாமக வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி, அதிமுகவினர் ஆதரிக்க வேண்டும்” என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார். ஆனால் பாஜகவினர், தங்களைத் தொடர்ந்து விமர்சித்ததை அதிமுகவினர் ரசிக்கவில்லை. அதனால் அதிமுக தரப்பு வாக்கு பாமக வசம் பெரிதாக வரவில்லை.

பாமக வேட்பாளரை ஆதரித்து பேசிய அண்ணாமலை, “நம்பிக்கைதுரோகி என்ற வார்த்தை பழனிசாமிக்கே பொருந்தும்” என்று சொன்னதை அதிமுகவினர் ரசிக்கவில்லை. இதனால் பாமக பக்கம் இயல்பாக வர வேண்டிய அதிமுக வாக்கு சிதறி விட்டதாகவே கருத வேண்டியது இருக்கிறது.

சில வாக்குச்சாவடிகளில் நாம் தமிழரை விட பாமக வாக்குகள் குறைவாக பெற்றதற்கு காரணம்; பாமகவில் உள்ள கோஷ்டி அரசியல் தான். இந்நாள் மாவட்ட நிர்வாகி, முன்னாள் மாவட்ட நிர்வாகியை மதிப்பதில்லை. கூடுதல் வாக்குகள் வாங்கி விட்டால்தற்போதுள்ள நிர்வாகியை வீழ்த்த முடியாது என்ற அரசியலும் உள்ளடங்கியே, பாமக தரப்பில் இந்த இடைத் தேர்தலை நடத்தி முடித்துள்ளனர். இவர் ராமதாஸ் ஆதரவாளர்; இவர் அன்புமணி ஆதரவாளர் என்று பிரிந்து கிடப்பதும் பாமகவின் பலவீனம் என்பதைஇந்த இடைத்தேர்தல் உள்ளங்கைநெல்லிக்கனியாக களத்தில் நமக்கு உணர்த்தியது.

ராமதாஸ் இத்தேர்தலில் போட்டியிட தேர்வு செய்த வேட்பாளரை அன்புமணி ‘டிக்’ செய்யாமல், தன்ஆதரவாளர் ஒருவர் சிபாரிசு செய்த சி.அன்புமணியை தேர்ந்தெடுத்தார். இதுவும் கட்சி நிர்வாகிகளிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.

பாமக முன்வைத்த, ‘10.5 சதவீதஉள் இடஒதுக்கீடு’ என்பது படித்துஅரசு வேலைக்கு செல்வோருக்கானது. இன்றைய இளைஞர்களில் 90 சதவீதத்தினர் அரசு பணியை விட சுய தொழில் அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்ற விரும்புகின்றனர். தற்போதுள்ள சூழலில் இத்தொகுதி மக்கள் இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதையெல்லாம் தாண்டி திமுகவின் அணுகுமுறையால் இந்த இடைத் தேர்தலில் 90 சதவீத பட்டியல் இனத்தவர், 35 சதவீத வன்னியர்கள் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். 60 சதவீத வன்னியர்கள் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர். 5 சதவீத வன்னியர்கள், 10 சதவீத பட்டியலினத்தவர், 20 சதவீத பிற சமூகத்தினர் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்று தோரயமாக ஒரு புள்ளி விவரத்தை முன்வைக்கின்றனர்.

இதே கணக்கும், இதே அணுகுமுறையும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியைத் தராது.

மாறாக இன்னும் இன்னும் கடினமாக களத்தை திமுக எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். அக்கட்சிக்கும் அது நன்றாகவே தெரியும். அதற்காக இப்போது போலவே, அப்போதும் அது களம் இறங்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x