Published : 16 May 2018 09:28 AM
Last Updated : 16 May 2018 09:28 AM
வடசென்னையில் சிபிசிஎல் நிறுவனம் தொடர்ந்து காற்று மாசு ஏற்படுத்தி வருவதாகவும் அதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தை கள் ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியன் ஆயில் குழும நிறுவனங்களில் ஒன்றான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்), வட சென்னையில் உள்ள மணலியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, பல்வேறு பெட்ரோலிய பொருட்களாகப் பிரிக்கப்படுகிறது. அப்போது உருவாகும் தேவையற்ற எரிவாயுக்கள், மிக உயர மான புகை போக்கி மூலமாக வெளியேற்றி எரிக்கப்படுகிறது. அப்போது சூழும் புகை வடசென்னை பகுதிகளில் பரவி காற்று மாசுவை ஏற்படுத்து வதாக, மணலி பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட தூரம் பரவிய புகை
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 13) அன்று, சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய புகை வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் நீண்ட தூரத்துக்கு பரவி இருந்தது. அது தொடர்பாக ‘தி இந்து’ சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் முகமது நசிமுத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் நேற்று, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சிபிசிஎல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிற்சாலைகளின் புகை போக்கியில் இருந்து வெளியேறும் புகையை ஆன்லைன் முறையில் கண்காணித்து தடுக்கும் ‘கேர் ஏர் சென்டர்’ திறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் சிபிசிஎல் போன்ற தொழிற்சாலைகளில் தினமும் வெளியேற்றும் புகையை கண்டுபிடிப்பதில்லை. கண்டுகொள்வதும் இல்லை என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாசுபடுத்தியது உறுதியானது
சிபிசிஎல் நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வு தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து புகை போக்கி வழியாக வெளியேறிய எரிவாயு எரிந்து புகையாக மாறி, பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தொழில்நுட்ப காரணங்களால் அன்று மாலை 3 முதல் 4.30 மணி வரை புகை வெளியேறியதாக சிபிசிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் இது போன்று மாசு ஏற்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகை போக்கியில் விளிம்பில் வெளியேறும் புகையை ஆன்லைனில் கண்காணிக்கும் வசதி உள்ளது. ஆனால் புகை போக்கி யின் விளிம்பில், தீ ஜுவாலை வந்து, அதன்பிறகு புகையாக மாறுவதை கண்காணிக்க முடியாது. இவ்வாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநகராட்சி அலட்சியம்
மணலியில் காற்று மாசு ஏற் படுவது மாநகராட்சி அதிகாரி களுக்கும் தெரியும். அதனால் குழந்தைகள் சுவாச மற்றும் ஒவ்வாமை நோய்களால் பாதிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதும் தெரியும். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் அவர்களிடம் உள்ள சுகாதார சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வடசென்னையில் கொடுங்கையூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் அதிக அளவில் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளுக்கு தனியார் கிளினிக் குழந்தை மருத்துவர்கள், மோட்டெலுகாஸ்ட் சோடியம் மாத்திரைகளை (Motelucast Sodium Tablet IP 4mg) பரிந்துரைத்து வருவதாக அப்பகுதி தாய்மார்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மாத்திரைகளை எந்த வகையான நோய்களுக்கு தரப் படுகிறது என்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த சுவாச நோய் மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, ஆஸ்துமா, ஒவ்வாமையால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இம்மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்றார்.
அதனால், ஒவ்வாமையால் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு காரணம் காற்று மாசுவாக இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயனிடம் கேட்டபோது, ``காற்று மாசு தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிக ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT