Published : 13 Jul 2024 08:46 PM
Last Updated : 13 Jul 2024 08:46 PM
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான புகழேந்தி மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்து காலமானார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு ’அதிமுக - திமுக’ இடையே கடுமையான போட்டி ஏற்படும் என சொல்லப்பட்டது. ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்தது அதிமுக. எனவே, திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா, பாஜக கூட்டணியில் பாமக சார்பாக சி.அன்புமணி ஆகியோர் களத்தில் பிரதான போட்டியாளர்களாக இருந்தனர். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கள்ளச் சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங் படுகொலை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை என திமுக அரசு மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அது தேர்தலில் பிரதிபலிக்கும் என சில தரப்பினர் கூறினர். ஆனால், இடைத்தேர்தலில் வென்றிருக்கிறது திமுக. வெற்றியைத் திமுக சாத்தியப்படுத்தியது எப்படி?
2024 விக்கிரவாண்டி தொகுதி விவரம்: ஆண் வாக்காளர்கள் - 1,25,246 / பெண் வாக்காளர்கள் - 1,17,813 / மூன்றாம் பாலின வாக்காளர்கள் - 28 / மொத்தமுள்ள வாக்காளர்கள் - 2,33,087. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு சதவீதம் 82.48 என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முடிவுகள் சனிக்கிழமை (ஜூலை 13) வெளியானது.
கடந்த கால தேர்தல் வரலாறு: கடந்த தேர்தலில் எந்தக் கட்சி இங்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பதை முதலில் பார்க்கலாம். கடந்த 3 முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2 முறை திமுக வென்றுள்ளது. ஒரு இடைத்தேர்தலில் அதிமுக வென்றுள்ளது. 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - அதிமுக நேரடியாகப் போட்டியைச் சந்தித்தன. ஆனால், இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து விலகியிருக்கிறது அதிமுக. இதனால், 'திமுக, பாமக' என இரு கட்சிகளுக்கு இடையே போட்டி எனக் களம் மாறியது.
கடந்த 2016-ம் ஆண்டு திமுக சார்பாகப் போட்டியிட்ட ராதாமணி 6,37,57 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் 3.98% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2019 நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 23.81% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் . இவரை எதிர்த்து திமுக சார்பாகக் களம் கண்ட புகழேந்தி 68,842 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கிய புகழேந்தி 93,730 வாக்குகள் பெற்று 4.97% வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
கட்சி அளவில் பார்த்தாலும் அனைத்துக் கட்சிகளுக்கும் இங்கு தனித்த வாக்கு வங்கி உள்ளது. குறிப்பாக, 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சியும் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தன. அப்போது, திமுக 35 சதவீத வாக்குகளையும் அதிமுக 31 சதவீத வாக்குகளையும் பாமக 23 சதவீத வாக்குகளையும் மக்கள் நலக் கூட்டணியில் சிபிஎம் 5 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. அதேபோல், 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக களத்தில் நல்ல போட்டியைக் கொடுத்தது.
2024 இடைத்தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்: திமுக - 1,24,053 / பாமக - 56,296 / நாதக - 10,602. திமுக கட்சி வேட்பாளர் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். விக்கிரவாண்டியைப் பொறுத்தவரை வன்னியர் வாக்குகள் அதிகமுள்ள தொகுதியாக இருக்கிறது. அது பாமகவுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமில்லாமல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமைக்கவிருக்கும் கூட்டணியை மனதில் வைத்து பாமகவுக்கு எதிரான போட்டியைத் தவிர்த்திருக்கிறது அதிமுக என்னும் பேச்சும் அடிபட்டது. அதை உறுதி படுத்தும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸும் ’அதிமுக தொண்டர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்’ எனப் பேசியிருந்தார். ஆகவே, அதிமுக விலகல் பாமகவுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கலாம் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அது பாமகவுக்கு எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை.
தவிர, திமுக பொறுத்தவரையிலும், 10.5% வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு குறித்து விவாதங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தன. குறிப்பாக, சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென கோரிக்கையைச் சட்டப்பேரவையில் வைத்து வெளிநடப்பு எனப் பல விசயங்களைத் திமுகவுக்கு எதிராக செய்தது பாமக. ஆனால், அந்த வியூகங்கள் ஏதும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை.
மேலும், கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச் சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங் படுகொலை என அதன் பொருட்டு திமுக மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் திமுகவுக்கு எதிரான வாக்குகளாக மாறும் எனச் சில தரப்பினர் பேசத் தொடங்கினர். குறிப்பாக, பாமக, நாதக என இரு கட்சிகளும் திமுக மீது இந்த விமர்சனங்களை முன்வைத்தன.
ஆனால், சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை அந்தப் பகுதிக்கு அரசால் என்ன பலன் என்பதைக் கணக்கிட்டுதான் மக்கள் தங்கள் வாக்கை செலுத்தியிருக்கிறார்கள். ஆகவே, கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என எதுவும் திமுகவுக்கு எதிரான வாக்குகளாக இங்கு மாறவில்லை. அதுதான் இந்தத் தேர்தல் முடிவிலும் தெரிகிறது. அதேவேளையில், பட்டியலின மக்களின் வாக்குகள் ’திமுக - விசிக’ கூட்டணி பக்கம் திரும்பியிருக்கிறது. ஒருவேளை, அதிமுக போட்டியில் இருந்திருந்தால் பட்டியலின வாக்குகள் சிதறியிருக்கலாம். ஆனால்,அவர்கள் போட்டியிடவில்லை. எதிர்த்தரப்பில் பாமக - பாஜக கூட்டணி அமைத்திருப்பதால் பட்டியலின மக்கள் வாக்குகள் அவர்கள் பக்கம் செல்லவில்லை. அது திமுகவுக்கு சாதகமாக திரும்பியுள்ளது.
அதுதவிர, ஆளும் கட்சியாக இருப்பது, கொண்டுவந்த நலத்திட்டங்கள் மற்றும் பணப்பட்டுவாடா என இவையெல்லாம் திமுகவுக்கு சாதகமான காரணிகளாக மாறி திமுகவுக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT