Published : 13 Jul 2024 08:26 PM
Last Updated : 13 Jul 2024 08:26 PM

இளம் வழக்கறிஞர்களுக்கு ஐகோர்ட் உத்தரவுப்படி மாதாந்திர உதவித் தொகை வழங்க அறிவுறுத்தல்

சென்னை: இளம் வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞரான ஃபரிதா பேகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு “சென்னை, மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களில் வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களிடம் ஜூனியராக தொழில் புரியும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.20 ஆயிரமும், தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 15 ஆயிரமும் வழங்கப்பட வேண்டும்.

இதில் எந்தவொரு பாலின பாகுபாடோ, பாரபட்சமோ காட்டக்கூடாது. இதுதொடர்பாக அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் நான்கு வாரங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சுற்றறிக்கை பிறப்பி்த்து அறிவுறுத்த வேண்டும்” என உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் விடுத்துள்ள சுற்றறிக்கையில்,“வழக்கறிஞர்களின் தொழில் சிறக்கவும், இளம் வழக்கறிஞர்களின் நலன் காக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் பார்வைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான மதிப்பையும் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையும் கூட. எனவே ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகமும் பிரகாசிக்க இளம் வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அனைத்து வழக்கறிஞர்களும் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x