Published : 13 Jul 2024 08:20 PM
Last Updated : 13 Jul 2024 08:20 PM

“அதிமுகவுக்கு பட்டியலின மக்களின் வாக்குகள் வெகுவாக குறைந்துவிட்டது” -  தி.மலை கட்சி நிர்வாகிகள் கருத்து

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

திருவண்ணாமலை: “அதிமுகவுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த பட்டியலின மக்களின் வாக்குகள் வெகுவாக குறைந்துவிட்டது” என சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அதிமுக தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வரை படுதோல்வியை அதிமுக தழுவியது. இதன் எதிரொலியாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது. 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்தான் இலக்கு என அறிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அதற்காக அதிமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தயார்படுத்தும் வேலைகளில் இறங்கி இருக்கிறார். அதற்காக மக்களவைத் தொகுதிகள் வாரியாக அதிமுக நிர்வாகிகளை அழைத்து மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை கேட்டறிந்து வருகிறார்.

இக்கூட்டங்களில் கட்சிக்கு எதிரான கருத்துகளை முன்வைக்க கூடாது, கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவிக்க கூடாது என உயர்மட்ட நிர்வாகிகளுக்கு ‘வாய் பூட்டு’ போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்னணி தலைவர்கள் ‘மவுனம்’ காத்து வருகின்றனர். இதர நிர்வாகிகளில் ஒரு சிலர் மட்டுமே கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இன்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிக்குள் ஒற்றுமை இல்லாததால், அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய கூட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர், “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது காலத்தில் இருந்த செல்வாக்கை அதிமுக இப்போது இழந்துள்ளது. சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் என்பது அதிமுகவுக்கு பெரிய பலம். ஆனால், இப்போது நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. அதிமுகவுக்கான முஸ்லிம், கிறிஸ்தவ, பட்டியலின மக்களின் வாக்குகள் வெகுவாக குறைந்துவிட்டன. பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 2011 தேர்தலில் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக தோற்றது. ஆனால், வரும் தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்தாலும், மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லை. இதனால் திமுகவும், அமைச்சர் எ.வ.வேலுவும் தொடர்ந்து வெற்றி பெறுகின்றனர். இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை தேவை. கட்சியில் பதவி வழங்கும்போது, சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில், அதிமுக வெற்றி பெற வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x