Published : 13 Jul 2024 05:46 PM
Last Updated : 13 Jul 2024 05:46 PM

அரசு மருத்துவமனைகளில் உள்ள அடையாளம் தெரியாத சடலங்களை தகனம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள அடையாளம் தெரியாத சடலங்களை தகனம் செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாம்பலத்தை சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய தொண்டு நிறுவனம் தரப்பில், அதன் நிர்வாக இயக்குநர் ரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உரிமை கோரப்படாத மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் நாளுக்கு நாள் அதிகளவில் தேங்கியுள்ளன. சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் மட்டும் அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் அப்புறப்படுத்தப்படாமல் தேங்கி கிடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலை தான் உள்ளது.

இதனால் இறந்தவர்களின் அழுகிய உடல்கள் துர்நாற்றம் வீசும் நிலையில் அவசரம், அவசரமாக புதைக்கப்படுகிறது. சில உடல்களை மருத்துவப் பயன்பாட்டுக்காகக் கொண்டு செல்லப்படுவதாகக் கூறி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதுமட்டுமல்லாமல் உடல்களை அடக்கம் செய்ய சென்னை போன்ற மாநகர பகுதிகளில் போதிய இடம் இல்லாத நிலை, தனியார் தொண்டு நிறுவனங்கள் உடலை அடக்கம் செய்ய முன் வந்தாலும் அதற்கான செலவுத் தொகையை தமிழக அரசு வழங்காதது, ஒரே இடத்தில் பல உடல்கள் புதைக்கப்படுவது என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.

எனவே அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களை உரிய சட்ட விதிகளை பின்பற்றி உடல்களில் உள்ள அங்க அடையாளம், சாட்சி, இறப்புச் சான்று, உடற்கூரு சான்று ஆகியவற்றை பெற்று மத்திய - மாநில மற்றும் மாவட்ட அளவிலான குற்ற ஆவண காப்பகத்தில் பதிவு செய்த பிறகு அந்த உடல்களை புதைக்காமல், தகனம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் இதே நடைமுறையை பின்பற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, “இந்த வழக்கு தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்” எனக் கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஆக.1-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x