Published : 13 Jul 2024 01:05 PM
Last Updated : 13 Jul 2024 01:05 PM
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ள நிலையில் சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 13 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 13-வது சுற்றின் முடிவில் திமுக 83,431 வாக்குகளும், பாமக 36,241 வாக்குகளும், நாதக 6,814 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவில் 573 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 47190 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியும், தொகுதியில் ஆங்காங்கேயும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்ட மனநிலையில் திமுக தொண்டர்கள் உள்ளனர். அதேபோல், சென்னையில் திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திலும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, சென்னையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கள்ளக்குறிச்சி சோக சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்ற இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளனர்.வெற்றி தேடித்தந்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திமுக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT