Published : 13 Jul 2024 10:57 AM
Last Updated : 13 Jul 2024 10:57 AM

ஆக.17 முதல் ஒரு மாதம் தமிழகத்தில் போதை ஒழிப்புப் பிரச்சாரம்: விசிக அறிவிப்பு

திருமாவளவன்

சென்னை: ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு தமிழகத்தில் போதை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசியதாவது: ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றம் கூடி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர். ஆக.12 வரை கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிகிறது. அதன் பின்னர் தீவிரமாக கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த இருக்கிறோம். குறிப்பாக, மாவட்டச் செயலாளர்களை நியமித்த பின்னர், தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நேர நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. அவர்களுக்கு துணை பொறுப்பாளர்களை நியமிக்க இயலவில்லை.

இந்தச் சூழலில் மாவட்டச் செயலாளர்களின் கருத்தை கேட்டறிந்து, மறுசீரமைப்புக்கான அடுத்த நகர்வை முன்மொழிய இருக்கிறோம். இதையொட்டி மாவட்டச் செயலாளர் கூட்டத்தை முதலில் நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. வரும் 20-ம் தேதி சென்னையில் விசிக மாவட்டச் செயலாளர்கள் மட்டும் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் ஒருங்கிணைக்கப்படும்.

முடிந்த ஓராண்டு காலத்தில் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றவர்கள், தாங்கள் ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கையை கலந்தாய்வு கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கட்சி நிர்வாகத்துக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பன உள்ளிட்டவை அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். அதன் பின்னர் மாவட்ட நிர்வாக மறுசீரமைப்பு குறித்த செயல்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

கல்வி உதவி: ஜூலை 15-ல், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவரது உருவப்படத்துக்கு நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்த வேண்டும். சிலை உள்ள இடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். அந்த நாளில் இயன்ற வகையில் பள்ளி மாணவர்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும். அன்றைய தினம் எனது தந்தை தொல்காப்பியனின் நினைவு நாள் என்பதால் அங்கனூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சென்னை திரும்பவுள்ளேன்.

ஆக.17-ம் தேதி தமிழர் எழுச்சி நாள். ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு கருப்பொருளை முன்வைத்து செயல்திட்டத்தை அறிவிப்போம். இந்த ஆண்டு மது உள்ளிட்ட போதைப் பொருள் ஒழிப்பு என்பதை கருப்பொருளாக எடுத்துக் கொள்ள இருக்கிறோம். இதுகுறித்து செப்.17 வரையிலான ஒரு மாத காலத்துக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறோம்.

மகளிர் மாநாடு: இதைத் தொடர்ந்து மகளிர் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். பெரியார் பிறந்தநாளான செப்.17 அந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. கள்ளக்குறிச்சி அல்லது விழுப்புரம் மாவட்டத்தில் மாநாடு நடைபெறும். இது விசிக வரலாற்றில் மைல் கல்லாக அமையும். இதற்கிடையே, கட்சி அங்கீகாரம் பெற்றதையொட்டி, நிகழ்வு ஒன்றை ஒருங்கிணைக்கவும் எண்ணியிருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x