Published : 13 Jul 2024 09:38 AM
Last Updated : 13 Jul 2024 09:38 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தேவஸ்தானத்தை கண்டித்து கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடையின்றி உணவு வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 3 கி.மீ. தூரம் உள்ள கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு, தனியார் வாகனங்கள் நுழையத் தடைய விதிக்கப்பட்டுள்ளது. பழநி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சென்று வர வசதியாக பேட்டரி கார்கள், மினி மற்றும் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பழநி சந்நிதி வீதி, பூங்கா சாலை, இட்டேரி சாலை, அய்யம்புள்ளி சாலையை கோயில் வசம் ஒப்படைக்க கோரி, தேவஸ்தான நிர்வாகம் நீதிமன்றம் வழியாக நகராட்சியை நிர்பந்தம் செய்து வருகிறது.
இந்நிலையில் மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுக்கவும், நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும் இன்று (ஜூலை 13) கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என நகராட்சி கவுன்சிலர்கள், வணிகர்கள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று (ஜூலை 13) சனிக்கிழமை காலை 6 மணி முதல் கடையடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பழநி அடிவாரம், பேருந்து நிலையம், சந்நிதி வீதி, மார்க்கெட் சாலை, திண்டுக்கல் சாலை, ஆர்.எப்.சாலை என நகர் பகுதியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், நகைக்கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள் உட்பட மற்ற கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
சில இடங்களில் திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி நகராட்சி கவுன்சிலர்கள் வற்புறுத்தினர். பெரும்பாலான ஆட்டோக்கள், குதிரை வண்டிகள் இயங்வில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தால் பக்தர்கள் சிரமப்பட்டனர். அதே சமயம், பழநி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் நலன் கருதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மலைக்கோயில் மற்றும் அடிவாரம் பகுதியில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பழநி அடிவாரம், கிரிவீதி, ரோப் கார் மற்றும் வின்ச் ரயில் நிலையம் பகுதி என 6 இடங்களில் 5 இடங்களில் பிஸ்கட், பிரட், பழங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது. மலைக்கோயிலில் குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டது. முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT