Published : 13 Jul 2024 08:31 AM
Last Updated : 13 Jul 2024 08:31 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்கை எண்ணும் பணி துவங்கியதும் முதல்வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.
விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி இத்தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற்றது.
‘இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது; அதனால் நாங்கள் போட்டியிடவில்லை’ என்று அதிமுக ஒதுங்கிய சூழலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதேர்தலில் 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவாகும்.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 572 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 276 கட்டுப்பாட்டுக் இயந்திரங்கள், 276 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டதை வேட்பாளர்களின் முகவர் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது.
20 சுற்றுகளாக.. வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 20 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மேலும், அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்காக 2 மேசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கை ஒரே சுற்றில் முடிவடையும். தபால் வாக்கை எண்ணும் பணி துவங்கியதும் முதல்வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT