Published : 13 Jul 2024 04:05 AM
Last Updated : 13 Jul 2024 04:05 AM

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,066 சுகாதார ஆய்வாளர்களை நேரடி நியமனம் செய்ய முடிவு

சென்னை: தமிழக அரசின் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,066 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-2) நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் 1,066 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-2) நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் 2 முடித்துவிட்டு மாநில பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்ககத்தின் 2 ஆண்டு கால பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்எல்சி மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண், சுகாதார பணியாளர் பயிற்சி தேர்வு அல்லது சுகாதார ஆய்வாளர் பயிற்சி தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மதிப்பெண் கணக்கிடும்போது, சுகாதார பயிற்சி தேர்வுக்கு 50 சதவீத வெயிட்டேஜ், பிளஸ் 2 தேர்வுக்கு 30 சதவீத வெயிட்டேஜ், எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 20 சதவீத வெயிட்டேஜ் அளிக்கப்படும்.

உரிய கல்வித் தகுதி, வயது வரம்புத் தகுதியுடைய நபர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை மாதம் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x