Published : 13 Jul 2024 05:41 AM
Last Updated : 13 Jul 2024 05:41 AM
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புதலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தஎஸ்.வி.கங்காபுர்வாலா கடந்த மேமாதம் பணிஓய்வு பெற்றார். இதையடுத்து, மூத்த நீதிபதியாக உள்ளஆர்.மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும், மும்பைஉயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள கே.ஆர்.ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, இதற்கான நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
75 முக்கிய உத்தரவுகள்: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த 1963-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி பிறந்தவர்.
மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து, 1989-ம்ஆண்டு வழக்கறிஞராக பதிவுசெய்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத் துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்தியஅரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றி, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு சென்னைஉயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஆர்.மகாதேவன், தமிழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க, பழமையான கோயில்கள், புராதன சின்னங்கள், கோயில் நகைகள் பாதுகாப்பு, சிலை கடத்தல்தொடர்பான வழக்குகளை விசாரித்து, தமிழக அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் 75 உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் சேவையில் ஆர்வம்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள கே.ஆர்.ராம், கடந்த 1963-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம்தேதி மும்பையில் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பையும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் கடல்சார் சட்டத்தில் முதுநிலை சட்டப் படிப்பையும் முடித்தவர். சர்வதேச கடல்சார் வணிகம், துறைமுகம், சுங்கத் துறை, மோட்டார் வாகன சட்டம், நிறுவன சட்டம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ள கே.ஆர்.ராம், கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதிமும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அடித்தட்டு, விளிம்புநிலை மக்களுக்கு சேவையாற்றுவதில் அதிக அக்கறை கொண்டவரான நீதிபதி கே.ஆர்.ராம், தன்னார்வதொண்டு நிறுவனத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார். கோல்ஃப் வீரரான இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT