Published : 13 Jul 2024 06:35 AM
Last Updated : 13 Jul 2024 06:35 AM

மின்வாரிய காலி பணியிடங்களால் குளறுபடிகள்: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக மின்வாரியத்தில் உள்ளகாலியிடங்களால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாகதேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது மின்வாரியம் தான். இந்நிலையில் மின்வாரியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்து வருவதால் பல்வேறு பல குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக வீடுகள், நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால், தங்களுக்கு உதவியாக வயர்மேன்கள் அந்தந்த இடத்தில் உள்ள எலக்ட்ரீசியன்களை கையில் வைத்து கொண்டு, மின்தடை ஏற்பட்ட இடத்தில் இருந்தே ரூ.50, ரூ.100 என வசூல் செய்து அவர்களுக்கு கொடுக்கின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கு மின்பணிகள் சரியான முறையில்செய்யப்படாமல் பாதிப்படைகின்றனர். போதுமான தொழிலாளர்கள் இருந்தால் இந்த அவலநிலைக்கு அவசியமில்லை. அதேபோல அரைகுறையாக வேலை தெரிந்தவர்களை வேலை செய்ய வைக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்துவிட்டால், இவர்கள் மின்வாரியத்தில் பணி புரியவில்லையென மின்வாரியம் கை கழுவுகிறது. இதுமட்டுமின்றி புதிதாக கட்டப்படும் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின் இணைப்புக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்து வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் போதுமான அலுவலர்களும், மின் உபகரணங்களும் மின்வாரியத்தில் இல்லாததுதான். மின்வாரியத்தின் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே அதிகாரிகள் இருந்து வருகின்றனர். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை. எனவே மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களைப் பணிநியமனம் செய்து, உடனடியாக சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x