Published : 12 Jul 2024 09:04 PM
Last Updated : 12 Jul 2024 09:04 PM
சென்னை: “காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மவுனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வந்த மத்திய பாஜக அரசின் நடவடிக்கை தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையே உறுதி செய்கிறது. எனவே காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை நிறைவேற்ற பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீரை ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க வேண்டிய ஜூன் 12-ம் தேதி திறக்காத காரணத்தால் டெல்டா விவசாயிகள் நிலத்தடிநீரை பயன்படுத்தி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி 12-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் இறுதிவரை நாளொன்றுக்கு 1 டிஎம்சி காவிரி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை அறிவுறுத்தியிருக்கிறது.
ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜூலை மாதம் வரை 1 டிஎம்சி நீரை திறந்துவிட முடியாது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி மிக மிக குறைந்த நீரை தான் வழங்கும்படி கோரியிருந்தது. அந்த குறைந்தபட்ச நீரை கூட கர்நாடக அரசு தர மறுப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இந்த போக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை உதாசீனப்படுத்துகிற செயலாகும்.
காவிரி நீர் பங்கீட்டின்படி தமிழகத்துக்கு ஜூன் மாதம் ஏறத்தாழ 9 டிஎம்சியும், ஜூலை மாதத்தில் 31 டிஎம்சியும் ஆக மொத்தம் 40 டிஎம்சி தண்ணீர் பெறுகிற உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை 4.6 டிஎம்சி தான் கர்நாடக அரசு கடந்த 10-ம் தேதி வரை வழங்கியிருக்கிறது. இதன்படி ஏற்கனவே 19.3 டிஎம்சி தரவேண்டிய நீர் நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு குறிப்பிடாமல் பொதுவாக 12-ம் தேதியில் இருந்து நாள் தோறும் 1 டிஎம்சி வீதம் ஜூன் 31-ம் தேதி வரை வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு 1 டிஎம்சி திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை மறுக்கிற வகையில் கர்நாடக அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். தண்ணீர் பற்றாக்குறையில் குறுவை சாகுபடியை நிறைவு செய்யாமல் இருக்கும் சிரமமான நிலையை கர்நாடக முதல்வர் புரிந்துகொண்டு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மவுனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வந்த மத்திய பாஜக அரசின் நடவடிக்கை தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையே உறுதி செய்கிறது. எனவே காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை நிறைவேற்ற பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,”.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT