Last Updated : 12 Jul, 2024 07:59 PM

 

Published : 12 Jul 2024 07:59 PM
Last Updated : 12 Jul 2024 07:59 PM

விரிவுபடுத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வர் திட்டம்’ - ஒரே நாளில் 2,430 மனுக்களுடன் சேலம் முதலிடம்

மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

சேலம்: பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைத்திட, மக்களுடன் முதல்வர் திட்டம் நேற்று முதல் ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,430 மனுக்களைப் பெற்று, தமிழக அளவில் சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், தமிழக முதல்வரால், 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டம் நகர்ப்புறங்களில் 2023-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில், 15 துறைகளில் உள்ள 44 வகையான சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் அளித்து, மக்கள் நிவாரணம் பெற முடியும்.

இந்த விண்ணப்பங்களுக்கு 50 சதவீத இ-சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் கடந்த 11-ம் தேதியன்று, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் பொதுமக்களை, அவர்கள் இருக்கும் பகுதிக்கே சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று, உடனடியாக அதற்கான தீர்வுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கடந்த காலங்களில் மின் இணைப்புப் பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளை அரசுத் துறைகளில் செய்ய நீண்ட காலம் ஆனது. ஆனால், தற்போது பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உடனடியாக பெயர் மாற்றம் செய்து, அதற்கான சான்றிதழ்கள் வழங்குவது போன்ற நடைமுறைகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

சேலம் மாவட்டத்தில் 367 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளில் 92 சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கி, ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. முதல் நாள் முகாம், அயோத்தியாப்பட்டணம், ஓமலூர், தலைவாசல், வீரபாண்டி, மகுடஞ்சாவடி, மேச்சேரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்நிலையில், திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில், கிராமங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், பொதுமக்களிடம் அதிக எண்ணிக்கையிலான மனுக்களை பெற்று, தமிழக அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றது. அதன்படி, 'மக்களுடன் முதல்வர் திட்டம்' சார்ந்த 15 துறைகளில் 1,568 மனுக்களும், திட்டத்தில் சாராத துறைகளில் 862 மனுக்களும் என ஒரே நாளில் 2,430 மனுக்கள் பெறப்பட்டு, துறை சார்ந்த நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது.

சேலம் மாவட்டத்தைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் 2,331 மனுக்களும் நாமக்கல் மாவட்டத்தில் 2,284 மனுக்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1,833 மனுக்களும் அடுத்தடுத்த அதிக எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x