Published : 12 Jul 2024 05:16 PM
Last Updated : 12 Jul 2024 05:16 PM
சென்னை: தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், அதை தயாரித்து விற்பவருக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனை, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 66 பேர் இறந்தனர். இதையடுத்து, கள்ளச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில், சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக, தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான மசோதா அமைச்சர் சு.முத்துசாமியால் கடந்த ஜூன் 29-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து கள்ளச் சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே தான் கள்ளச் சாராயத்துடன் கலக்கப்படகூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடைசெய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியமாகிறது.
இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் சிறை தண்டனையின் கால அளவும், தண்டனைத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்கவும், கொண்டு செல்வற்கும் வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மதுவை அருந்தி மரணம் ஏற்பட்டால் அதை விற்றவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
இதுபோன்ற குற்றங்களில் பயன்படுத்தும் அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்த பயன்படுத்தப்படும் உரிமம் இல்லாத இடங்களை மூடி முத்திரையிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு உத்தரவாதத் தொகையுடன் கூடிய பிணை பத்திரத்தை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜூலை 12) ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். இதையடுத்து, இந்த சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்ட்டு, அதன்பின் அமலுக்கு வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT