Published : 12 Jul 2024 03:53 PM
Last Updated : 12 Jul 2024 03:53 PM

பம்மல் அனகாபுத்தூரில் சிதைந்த சாலைகள்: கடும் அவதியில் வாகன ஓட்டிகள்

அனகாபுத்தூர் - பம்மல் பகுதியில் பாதாள சாக்கடை பணி காரணமாக சேதமடைந்த சாலைகள். | படம்: எம். முத்துகணேஷ் |

தாம்பரம் மாநகராட்சியில் அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் முதுகு தண்டுவடம் தேய்வதாக, வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் மற்றும் பம்மலில் ரூ.211.15 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது.

இந்தபணிகள் கடந்த 26.2.2021 அன்று தொடங்கியது. தற்போது பல இடங்களில் பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ள பல்வேறு சாலைகள் உருக்குலைந்து விட்டன. மழை பெய்ததால்சாலையில் அங்காங்கே பெரிய பள்ளம் ஏற்படுகிறது. இதனால், டூ வீலரில் செல்வோர், விபத்தில் சிக்குகின்றனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து சாலையின் குறுக்கே குழிகள் இருப்பதால், இருசக்கர வாகனத்தில் செல்வோரின் இடுப்பு எலும்பு தேய்ந்து, கடும் முதுகுவலி ஏற்படுகிறது. எனவே, பணி முடிந்த இடங்களில்விரைவில் சீரமைப்பு பணியை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாம்பரம்மாநகராட்சியை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அனகை டி. முருகேசன்

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ அனகை டி. முருகேசன் கூறியது: அனகாபுத்தூர் - பம்மல் சாலை கற்கள்பெயர்ந்து பெரிய பள்ளங்களுடன் காட்சி அளிக்கிறது. சாலையில் கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் இருசக்கர வாகனங்களின் டயர்கள்அடிக்கடி பஞ்சராகின்றன. பள்ளி வாகனங்கள், 108 ஆம்புலன்ஸுகள் மற்றும் பிற வாகனங்கள் மிகுந்த இடையூறுகளுடன் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.

மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் இந்த சாலை வழியாக பயணிக்கும் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள் குண்டும் குழியுமானசாலைகளால் உயிர் பலி ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

தாம்பரம் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக சாலையின் நடுவேஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது, அப்பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ளன. ஆனால்,சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் உள்ளது. மேலும் பம்மல் - குன்றத்தூர்சாலை விரிவாக்கமும் செய்யப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு இதில் தலையிட்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநகராட்சி விரிவான விளக்கம்: இதுகுறித்து மாநகராட்சி சார்பில் கூறியதாவது: பல்லாவரம் - குன்றத்தூர் மாநிலநெடுஞ்சாலையில் கடந்த ஜூன் 15-ல் பாதாளசாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி அனகாபுத்தூர் ஏடூபி உணவகம் முதல் அடையாறு ஆறு வரை, இயந்திர நுழைகுழி 123 எண்ணிக்கையில் 105எண்ணிக்கை முடிக்கப்பட்டது.

கழிவுநீர் குழாய்3,022.20 மீட்டர் நீளத்தில் 1,823 மீட்டர் முடிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் தொட்டி வீட்டிணைப்பு 160 எண்ணிக்கையில் 65 எண்ணிக்கை முடிக்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலை துறைக்கு 865 மீட்டர் நீளம் சாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பம்மல் மார்ஸ் ஹோட்டல் முதல் ஏடுபி உணவகம் வரை, இயந்திர நுழைகுழி 65 எண்ணிக்கையில் 49 எண்ணிக்கை முடிக்கப்பட்டது. கழிவுநீர்குழாய் 1,437 மீட்டர் நீளத்தில் 1,017 மீட்டர் முடிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் தொட்டி வீட்டிணைப்பு 390 எண்ணிக்கையில் 120 எண்ணிக்கை முடிக்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலை துறைக்கு300 மீட்டர் நீளம் பணிகள் முடிக்கப்பட்டு இந்த மாதம் இறுதிக்குள் மாநில நெடுஞ்சாலைத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மேற்கண்ட இயந்திர நுழைவுகுழி மற்றும் கழிவுநீர் குழாய் பணிகள் அனைத்தும் 12 முதல் 15 அடி ஆழத்தில் நடைபெறுகிறது. இதில் அவ்வப்போது சில இடங்களில் கடினத்தன்மை வாய்ந்த பாறைகள் வருவதால் அதனை அகற்றி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பகல் மற்றும் இரவுநேரங்களிலும் நடைபெறும் பணிகள் முடித்துஅடுத்த நாள் காலையில் சாலைகள் சீரமைக்கும்பணி 6 மணி முதல் 8 மணிக்குள் செய்து சாலைகள்போக்குவரத்துக்கு தயார் செய்யப்படுகிறது. மேற்படி சாலைகள் சீரமைக்கும் பணி முடிக்கப்பட்ட பகுதியில் அடுத்த நாள் இரவில் கான்கிரிட் பேட்ச் பணி செய்யப்படுகிறது.

ஒவ்வொரு பகுதியாக மாநில நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைக்கப்பட்டு, அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15முதல் 20 நாட்களாக இரவு, பகலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல் துறையும் பணிகளுக்கு உதவி வருகின்றனர். விரைவில் பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x