Published : 12 Jul 2024 03:02 PM
Last Updated : 12 Jul 2024 03:02 PM
சென்னையில் அதிக குடியிருப்புகளையும், பல்வேறு வணிக வளாகங்களையும் கொண்ட பகுதிகளில் ஒன்றாக சூளைமேடு இருக்கிறது. சென்னையில் வளர்ந்து வரும் பகுதியாக திகழும் இங்கு பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கின்றனர். இதையொட்டி அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி, அமைந்தகரை ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.
சூளைமேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு தெருவாக வரும் குப்பை வண்டிகளில் (பேட்டரி கார் அல்லது தள்ளுவண்டிகளில்) போடுகின்றனர். இவற்றை தவறவிட்டால், தெருக்கள் அல்லது சாலைகளின் ஓரமாக மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள உலோகத்தால் ஆன குப்பைத்தொட்டிகளில் போடுகின்றனர். இதுதவிர, இந்த குப்பைத்தொட்டிகளில் தள்ளுவண்டி அல்லது பேட்டரி கார் மூலமாக பெறப்படும் குப்பைகளும் கொட்டப்படுகின்றன.
இதனால், இந்த குப்பைத் தொட்டிகள் விரைவாக நிரம்பிவிடுகின்றன. இதன்பிறகு, பொதுமக்கள் குப்பைகளை இத்தொட்டிகள் அருகே வைத்து செல்கின்றனர். இதனால், பல இடங்களில் குப்பைகள் குவிந்தும், சிதறியும் கிடக்கின்றன. சூளைமேடு கண்ணகி தெருவில் இருந்து அரும்பாக்கம் செல்லும் பாதையில் கூவம் அருகேயும், இந்திரா காந்தி 3-வது தெருவிலும் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. அரும்பாக்கம் விநாயகபுரம், எம்எம்டிஏ காலனி எம்ஜிஆர் நகர், பசும்பொன் தெரு, காமராஜர் நகர் 3-வது தெரு உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் குவிந்துவிடுகின்றன.
சூளைமேடு பாரதி தெரு, காந்தி சாலையில் உள்ள குப்பை தொட்டிகள் அருகே குப்பைகள் குவிந்தும், சிதறியும் கிடக்கின்றன. சில இடங்களில் குப்பை கழிவுகள் சாலையில் மழை நீருடன் கலந்து தேங்கி நிற்கின்றன. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது.
அமைந்தகரை பகுதியில் ஆசாத்நகர் 2-வது தெரு, கலெக்ட்ரேட் காலனி 2, 5-வது குறுக்குதெரு, அய்யாவு காலனி, மெட்டல் பேக்டரி சாலை பூங்கா நுழைவாயில் அருகே ஆகிய இடங்களிலும் குப்பைகள் சாலை ஓரமாக சிதறி காணப்படுகின்றன. அரும்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை ஆகிய பகுதிகளில் பல இடங்களில் குப்பைத்தொட்டிகள் மட்டுமின்றி அதன்அருகேயும் குப்பைகள் குவிந்துகிடப்பது தொடர்கிறது. இதனால், இந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து, சூளைமேட்டைச் சேர்ந்த மனோஜ்குமார் கூறியதாவது: குப்பை வண்டியை இயக்கும் பணியாளர்கள் சரியான நேரத்தில் வருவது இல்லை. மேலும் அவர்கள் வருவதை ஒலிபெருக்கி மூலமாக முறையாக அறிவிப்பதும் இல்லை. இதனால், இந்த வண்டிகளை பொதுமக்கள் தவறவிடுகின்றனர். எனவே, தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை பொதுமக்கள் போடுகிறார்கள்.
இவற்றை மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலமாக முறையாக அகற்றுவது இல்லை. இதனால், பல நேரங்களில் இத்தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. எனவே, குப்பைகளை பொதுமக்கள் குப்பை தொட்டி அருகே வைத்து விட்டு செல்கின்றனர். இவை குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவும் அபாய சூழல் உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரத்தில் 3 ஷிப்ட் அடிப்படையில் குப்பைகளை அகற்ற வேண்டும். இதுபோல, தெருவுக்கு வரும் குப்பை வண்டிகள் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்க வேண்டும். சரியான நேரத்தில் அவர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மாநகராட்சி விளக்கம்: இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஒவ்வொரு தெருவாக சென்று பொதுமக்களிடம் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இதுதவிர, எல்லா இடங்களிலும் குப்பைத் தொட்டிகளை வைத்து குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் சரியாக போடுவது இல்லை.
குப்பைத்தொட்டி அருகே வைத்துவிட்டு செல்கின்றனர். சில நேரங்களில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால், அந்த இடம் அசுத்தமாக மாறி விடுகிறது. இந்த இடங்களில் பணியாளர்கள் தினசரி சுத்தம் செய்து வருகின்றனர். மேலும், நாள்தோறும் காலை, இரவு நேரத்தில் முறையாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து உள்ளோம்" என்றார். 24 மணி நேரத்தில்3 ஷிப்ட் அடிப்படையில் குப்பைகளை மாநகராட்சி அகற்ற வேண்டும். தெருவுக்கு வரும் குப்பை வண்டிகள் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT