Published : 12 Jul 2024 12:47 PM
Last Updated : 12 Jul 2024 12:47 PM
கிருஷ்ணகிரி: “பாஜக தலைவர் அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுகுறிக்கி கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குறிப்பாக, வடமாநிலங்களில் தனிநபர்களை தாக்கிப் பேசுவது அதிகமாக நடைபெறும். தமிழகத்தில் தற்போது தான் அதனை தொடங்கி உள்ளனர்.
தனிநபர்களைத் தாக்கி பேசுவது மட்டுமல்லாது ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கருணாநிதி தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். காமராஜரைத் தொடர்ந்து கருணாநிதி தான் பொன் எழுத்துக்களால் எழுதக்கூடிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தி வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ள கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை ஒப்பிடும்போது, கடந்த 3 ஆண்டுகளில் குறைவாகத் தான் நடந்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவுத்துறையில் ஆய்வாளருக்கு பதிலாக, துணை காவல் கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் ஐஜி அந்துஸ்து உள்ள அலுவலர்களை நியமித்து வலிமைப்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை வழங்க மறுக்கும் கா்நாடகா அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் காந்திய வழியில் போராட தயாராக உள்ளது.
அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அவர் என் மீது தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT