Published : 12 Jul 2024 05:26 AM
Last Updated : 12 Jul 2024 05:26 AM
சென்னை: தமிழக சுகாதார கட்டமைப்பு மற்றும் தரத்தினை மேம்படுத்த ரூ.3,000 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சுகாதார தரத்தினை மேம்படுத்தும் வகையில் உலக வங்கியின் உதவியுடன், சுகாதார சீரமைப்பு திட்டம், 2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்தாண்டு கொண்ட திட்டத்தில், ரூ.2,854.74 கோடி மதிப்பில் பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரூ.1,998.32 கோடி உலக வங்கியும்,ரூ.856.42 கோடி மாநில அரசும் நிதி அளிக்கிறது. கடந்த 2019-ல்இருந்து இதுவரை உலக வங்கியிடமிருந்து, ரூ.1,621.86 கோடி பெறப்பட்டு, தொற்றா நோய், விபத்து சிகிச்சை, பேறுசார் மற்றும்குழந்தைகள் நல திட்டம், மருத்துவ உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டம், இந்தாண்டுடன் முடிவடையும் நிலையில், இத்திட்டத்தில் மீதமுள்ள ரூ.376.46கோடி மற்றும் புதிய கட்டமைப்புகளுக்காக, ரூ.3,000 கோடி நிதியுதவியை வழங்க கோரி, உலகவங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
அங்கு, வாஷிங்டனில் உள்ள,உலக வங்கி தலைமை அலுவலகத்தில், அவ்வங்கியின் தெற்காசியா பிராந்திய துணைத் தலைவர்மார்டின் ரைசர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்டு உள்ள செயல் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
இதுகுறித்து, சுகாதாரத் துறைஅதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை உலக வங்கி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தற்போது கேட்கப்பட்டுள்ள ரூ.3,000 கோடி நிதியுதவிஅளிக்கவும் முன்வந்துள்ளனர். உலக வங்கி அதிகாரிகள் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், மக்கள் நல்வாழ்வுதுறை செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து எவ்வளவு நிதி ஒதுக்கீடுஎன்பது குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள். உலக வங்கி அதிகாரிகளுடனான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT