Published : 11 Jul 2024 10:17 PM
Last Updated : 11 Jul 2024 10:17 PM
திருச்சி: முன்னாள் முதலவர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடலை பாடியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்டார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8-ம் தேதியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர்கள் குறித்து, குறிப்பாக மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை பாடினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டதன்படி, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் துரைமுருகனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனிடம் 3 மணி நேரத்துக்கு மேல் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என்று கூறி விடுவித்தார்.
முன்னதாக சாட்டை துரைமுருகன் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தஞ்சாவூர் போலீஸாரால் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இனிமேல் யார் குறித்தும் அவதூறு பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் இவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அதிலிருந்தும் ஜாமீன் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT