Published : 11 Jul 2024 07:50 PM
Last Updated : 11 Jul 2024 07:50 PM

தெரு நாய்களைப் பிடித்து திருப்பூர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் போராட்டம் அறிவிப்பு

திருப்பூர்: ‘தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து, அவற்றின் பெருக்கத்தைக் குறைத்து, மக்களைப் பாதுகாத்திட வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தெரு நாய்களைப் பிடித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்’ என்று மார்க்சிஸ்ட் கட்சிப் பிரமுகர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகர செயலாளர் ச.நந்தகோபால் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகராட்சியின் 12, 11, 13, 14, 24, 25 மற்றும் 10 ஆகிய வார்டுகளில் தினமும் பலரை தெருநாய்கள் கடித்து அவதிப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

காலை நேரத்தில் நடைப் பயிற்சிக்குச் செல்லும் முதியவர்கள், அதிகாலையில் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்பவர்கள், மளிகைக் கடைகளுக்கு பொருட்கள் வாங்க சந்தைக்குச் செல்லும் வணிகர்கள், நாளிதழ் விநியோகம் செய்வோர் என ஏராளமனோரை துரத்திக் கடிப்பதும், திடீரென சாலையின் குறுக்கே ஓடும்போது, வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி, விழுந்து பலமாதங்கள் படுக்கையிலும், மருத்துவமனையிலும் வாழ்க்கையை இழந்து வேதனையை அனுபவிக்கின்றனர்.

குடியிருப்புப் பகுதிகளில் தெருக்களில் அணிவகுத்துச் செல்லும் நாய்களால், குழந்தைகள் வெளியில் வந்து விளையாடுவதும் குறைந்துவருகிறது. இறைச்சிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், குப்பைத் தொட்டிகளில் கொட்டிவிடுவதாலும், அதிகாலையிலும், இரவு நேரங்களிலும் நாய்களின் சண்டையால், மக்களின் உறக்கம் கலைகிறது. குழந்தைகள் அச்சமடைகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால், பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை அழைக்க, அலைபேசி எண் தருகிறார்கள். அவர்கள், நாய்களைப் பிடிக்க வந்து செல்ல பணம் கேட்பதால் பொதுமக்களால் அதை தர முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்துள்ள புள்ளி விவரம், மனதை பதைக்க வைக்கிறது. ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் வரையிலான 6 மாதத்தில் மட்டும் 1,158 பேர் தெரு நாய்க்கடிக்கு ஆளாகி, சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். கடந்த மாதம் (ஜூன்) மட்டுமே 263 பேரை நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 20 முதல் 30 பேர் வரை நாய்க்கடிக்கு, நாள்தோறும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், மாநகரில் மக்களின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இதைக் கருதி, காலம் தாழ்த்தாமல், தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து, அவற்றின் பெருக்கத்தைக் குறைத்து, மக்களைப் பாதுகாத்திட வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தெரு நாய்களைப் பிடித்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்” என்று நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x