Published : 11 Jul 2024 07:43 PM
Last Updated : 11 Jul 2024 07:43 PM
சென்னை: “தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம் என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது” என்று சாட்டை துரைமுருகன் கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “கடந்த மூன்றாண்டு திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம் என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறை கையில் வைத்திருக்கும் திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT