Published : 11 Jul 2024 05:50 PM
Last Updated : 11 Jul 2024 05:50 PM

“பாலாற்றில் ஆந்திர அரசை அணை கட்ட விடமாட்டோம்” - அமைச்சர் துரைமுருகன் உறுதி

காட்பாடி அடுத்த சேவூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

வேலூர்: பாலாற்றில் ஆந்திர அரசை அணை கட்ட விடமாட்டோம் என்று வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் முதல்வரின் முகவரி துறை சார்பில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமபுரியில் இன்று தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள சேவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘‘அரசின் சார்பில் நடைபெறும் விழாக்களில் இந்த விழா மக்களுக்கு 100 சதவீதம் பயனுள்ள விழா. மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் திட்டம் தான் மக்களுடன் முதல்வர் திட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் எத்தனையோ நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் மக்கள் வழங்கும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

முதல்வர் எங்காவது நிகழ்ச்சிகளுக்கோ அல்லது கூட்டங்களுக்கோ செல்லும் பொழுது மனுக்களை வழங்கும் மக்களிடம் அவர்களை அருகில் அழைத்து அந்த மனுவை அவரே பெற்றுக் கொள்கிறார். அதனாலயே நான்கூட முதல்வரை மனுநீதி ஸ்டாலின் என அன்பாக அழைப்பதுண்டு.

பொதுமக்கள் அரசுத் துறைகளில் பெற வேண்டிய சான்றிதழ்கள், பெயர் மாற்றம், பட்டா போன்ற பல்வேறு சேவைகளுக்கு அரசு அலுவலகங்களை தேடிசென்று மனு அளித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தீர்வு காண வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால், தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள இந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் மனுக்கள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டு தீர்வு காண்பது சிறப்பம்சம்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் ‘‘தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் கட்டணமின்றி மண் எடுக்க அனுமதித்துள்ளோம். அங்கு முறையாக மண் அள்ளப்படுகிறதா என்றும், ஒதுக்கிய இடத்தில் ஒதுக்கிய அளவீட்டில் அள்ளப்படுகிறதா என்றும் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை முன்விரோதம் காரணமாக நடந்தது. எதிர்க்கட்சிகள் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்றுதான் சொல்வார்கள். பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை. நாங்கள் கட்டவிட மாட்டோம். கண்காணித்து நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x