Published : 11 Jul 2024 05:09 PM
Last Updated : 11 Jul 2024 05:09 PM
புதுக்கோட்டை: “சாட்டை துரைமுருகன் பயன்படுத்திய வார்த்தைகள் கைது நடவடிக்கைக்கு உகந்ததா, இல்லையா என்பதை படித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதன்பிறகு அரசின் மீது குற்றம் சுமத்தலாம்” என்று மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்க விழாவில் கலந்துகொண்ட ரகுபதி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் வரும்போது தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் பரிந்துரை செய்யும் திருத்தங்களை மேற்கொள்வோம்.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு இருப்பது, தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டப்பட்டுகிறது. அவர், தமிழக அரசுக்கு எதிராக என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்தினார், அந்த வார்த்தைகள் கைது நடவடிக்கைக்கு உகந்ததா இல்லையா என்பதை படித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதன்பிறகு அரசின் மீது குற்றம் சுமத்தலாம். பழிவாங்கும் நோக்கத்தோடு அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
தற்போது அதிமுகவினரின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. அக்கட்சியின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களும், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தகவல் ஊரெங்கும் பரவிவிட்டது. எனவே, இதை யாரும் மறுக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆபத்தான சூழலைச் சந்திக்கும் என மக்களவை தேர்தலுக்கும் முன்பே கூறினேன்.
அது, தற்போது நடந்துகொண்டு இருக்கிறது. எனவே, அங்கு இருக்கக் கூடிய உண்மையாக அதிமுக தொண்டர்கள், திமுகவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறோம். அவ்வாறு வருவோரை திமுக தலைவர் அரவணைத்துக்கொள்வார். திராவிட இயக்கத்தை வழி நடத்தக் கூடிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் மட்டும் தான். ஆகையால்தான் உண்மையான அதிமுக தொண்டர்களை திமுகவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக வாக்குகள் யாருக்கு சென்றுள்ளது என்பது அப்போது தெரியும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமறைவாக இருப்பதிலேயே அவர் தவறு செய்துள்ளார் என்பது தெரிகிறது. தைரியம் இருந்தால் அவர் வெளியே வரலாம். முன் ஜாமீன் கேட்டுக்கொண்டு இருக்கிறார்; கிடைக்கவில்லை. தலைமறைவாக உள்ள அவரை தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக காவல் துறைக்கு உள்ளது. ஆகையால், அவரை போலீஸார் தேடிக் கொண்டு இருக்கின்றனர். அவர் எந்த மாநிலத்துக்கு சென்றிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் காவல் துறை நிறுத்தும்” என்றார்.
சாட்டை துரைமுருகன் கைது: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தஞ்சாவூர் போலீஸாரால் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இனிமேல் யார் குறித்தும் அவதூறு பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் இவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அதிலிருந்தும் ஜாமீன் பெற்றார்.
தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8-ம் தேதியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர்கள் குறித்து, குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன்படி, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். குற்றாலத்தில் இருந்து சாட்டை துரைமுருகன் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட உள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT