Published : 11 Jul 2024 04:43 PM
Last Updated : 11 Jul 2024 04:43 PM

“என்னை விடவா அதிகம் பேசிவிட்டார்... சாட்டை துரைமுருகன் கைது ஏன்?” - சீமான் கொந்தளிப்பு

சென்னை: "திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்து வன்மத்துடன் செயல்படுகிறார். அவருக்கு யாரையும் பிடிக்கவில்லை. எங்கள் மீது அவருக்கு வெறுப்பு. ஏற்கெனவே சாட்டை துரைமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்தது இதே வருண்குமார்தான்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "தமிழகத்தில் 31 நாட்களில் 133 கொலைகள் நடந்துள்ளன. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகுதான் மற்ற கொலைகள் வெளியே தெரிகிறது. எல்லோராலும் அறியப்பட்ட தலைவர் கொல்லப்படும்போது தான் தமிழகத்தில் நிலவும் நிலை தெரிகிறது. ஏற்கெனவே கள்ளகுறிச்சியில் இத்தனை பேர் சாராயம் குடித்து இறந்தார்கள். இந்த நிலையில் மீண்டும் நேற்று விக்கிரவாண்டியில் கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சாராய அதிபர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் சாராயத்தை எப்படி ஒழிக்க முடியும்? இவர்கள் மீது பாயாத சட்டம், மேடையில் பேசியதற்காக சாட்டை துரைமுருகன் பாய்கிறது. எதற்காக இந்த அரசு சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது? என்னை விடவா சாட்டை துரைமுருகன் அதிகம் பேசிவிட்டார். அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் என்னை கைது செய்யுங்கள் பார்ப்போம். என்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இது ஓர் ஆட்சி முறை.

தமிழர் இன அரசியல் வரலாற்றில் தீய அரசியலின் தொடக்கம் அய்யா கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகு தான். பேரறிஞர் அண்ணா வரையிலான அரசியலில் எவ்வளவு நாகரிகம், கண்ணியம் இருந்தது. கருணாநிதி வந்த பிறகு ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவதூறு பேச்சுக்கள், சாராயம் வந்தது. முன்னாள் முதல்வர் என்றால் அவரை பற்றி பேசவே கூடாது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரை ஸ்டாலின் பேசாததா?.

திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்து வன்மத்துடன் செயல்படுகிறார். அவருக்கு யாரையும் பிடிக்கவில்லை. எங்கள் மீது அவருக்கு வெறுப்பு. ஏற்கெனவே சாட்டை துரைமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்தது இதே வருண்குமார்தான். உதயநிதியுடன் இருக்கும் ரத்தீஷ் தான் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, அவர்களுக்கு பணி உயர்வு கொடுப்பது அனைத்தும் செய்கிறார். ரத்தீஷ் தனக்கு நெருக்கமானவர் என்பதால் எஸ்பி வருண்குமார் இவ்வாறு தொடர்ந்து செயல்படுகிறார். வேண்டும் என்றால், வருண்குமாரின் செயல்பாடுகளுக்கு எதிராக ஆதாரங்களை தருகிறேன்.

பேசுவதற்கு எல்லாம் கைது செய்வதா? எனது தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக்கேட்கும் அரசுக்கு கள்ளச்சாராயம் விற்பவர்களையும், கொலை குற்றங்களில் ஈடுபடுவதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு தெருவுக்கு ஒரு அமைச்சர் என்று பணத்தை வாரி வழங்கியிருக்கின்றனர். மூன்றாண்டுகள் நல்லாட்சி செய்துள்ளோம் எனக் கூறிவிட்டு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இது ஒரு தேர்தலா?" என்று சீமான் கூறினார்.

சாட்டை துரைமுருகன் கைது: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தஞ்சாவூர் போலீஸாரால் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இனிமேல் யார் குறித்தும் அவதூறு பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் இவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அதிலிருந்தும் ஜாமீன் பெற்றார்.

தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8-ம் தேதியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர்கள் குறித்து, குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன்படி, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். குற்றாலத்தில் இருந்து சாட்டை துரைமுருகன் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட உள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x