Published : 11 Jul 2024 04:55 PM
Last Updated : 11 Jul 2024 04:55 PM
மதுரை: நெல்லை வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் வழக்கறிஞர் சங்கம் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிதம்பரம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் நெல்லை வழக்கறிஞர் சங்க உதவி செயலாளராக பணிபுரிந்து வந்தேன். சங்க நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்த நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 28-ல் நடைபெற்றது. இந்த தேர்தல் விதிப்படி நடைபெறவில்லை. உரிய தேதிக்குள் சந்தா செலுத்தாவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. இது வழக்கறிஞர் சங்கத்தின் தீர்மானத்துக்கு எதிரானது. சேரன்மகாதேவி, ஆலங்குளம் வழக்கறிஞர் சங்கத்தில் உள்ள வழக்கறிஞர்களின் பெயர்களும் நெல்லை வழக்கறிஞர் சங்கத்தில் உள்ளது.
இவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இதுவும் விதிகளுக்கு எதிரானது. தேர்தலில் வாக்களித்தவர்கள் சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதற்கான சான்றிதழ்களை சமர்பிக்கவில்லை. எனவே, தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நெல்லை வழக்கறிஞர் சங்கத் தேர்தலை ரத்து செய்து, விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு, மனு தொடர்பாக நெல்லை வழக்கறிஞர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT