ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே உள்ள சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள் பழுதாகி நிற்பதால் பொதுமக்கள், நோயாளிகள் படிக்கட்டில் ஏறி செல்கின்றனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே உள்ள சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள் பழுதாகி நிற்பதால் பொதுமக்கள், நோயாளிகள் படிக்கட்டில் ஏறி செல்கின்றனர்.

சென்னை - சென்ட்ரல் ரயில் நிலைய சுரங்கப் பாதையில் நகராத படிக்கட்டுகள்: நோயாளிகள், முதியவர்கள் அவதி

Published on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில் பொறுத்தப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதால் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்படுவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் தொலைபேசி சேவையை தொடர்பு கொண்டு வாசகர் ஒருவர் தெரிவித்ததாவது: சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வெளியூர்களில் இருந்தும், புறநகர் பகுதிகளில்இருந்தும் தினசரி லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளது.

மேலும், அண்ணாசாலை, மந்தைவெளி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, தாம்பரம், திருவல்லிக்கேணி, அண்ணா சதுக்கம் போன்ற பகுதிகளுக்குசெல்வதற்கு பேருந்து நிறுத்தமும் மருத்துவமனைக்கு வெளியே உள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிறுத்தத்துக்கு பொதுமக்கள் எளிதாக செல்வதற்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நகரும் படிக்கட்டுகள் மாதத்தில்பெரும்பாலான நாட்கள் இயங்குவது இல்லை. இதனால், பொதுமக்கள் சிரமப்பட்டு படிக்கட்டுகளில் ஏறி செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக, மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், காலை நேரத்தில் அலுவலகத்துக்கு வேகமாக செல்லும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள் எப்போதும் பழுதாகி செயல்படாமல் உள்ளது. இதேபோல், பூங்கா நகர் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள சுரங்கப்பாதை நகரும் படிக்கட்டும் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்து நின்று விடாமல் சரியாக செயல்பட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வாசகர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in