Last Updated : 11 Jul, 2024 03:33 PM

 

Published : 11 Jul 2024 03:33 PM
Last Updated : 11 Jul 2024 03:33 PM

புறக்கணிக்கப்படும் புழல் பகுதி: அரைகுறையாக விடப்பட்ட மேம்பாட்டு பணிகளால் அவலம்

இரு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் முடிவடையாமல் உள்ள மழைநீர் வடிகால் பணி.

சென்னை மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன் 174 சதுர கி.மீட்டர் பரப்பளவில் இருந்தது. பின்னர் அதனுடன் 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு 426 சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி எனப் பெயரிடப்பட்டது. அவ்வாறு சேர்க்கப்பட்ட உள்ளாட்சிகளில் புழல் பேரூராட்சியும் ஒன்று. தற்போது இந்தப் பகுதி மாதவரம் மண்டலத்தின் கீழ் வருகிறது. சென்னையுடன் இணைக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், புழல் பகுதி சற்று பின்தங்கிய நிலையில் விடப்பட்டுள்ளது.

3 ஆண்டாக நடக்கும் பணி: சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. புழல் பகுதியில் குறிப்பாக வார்டு எண்.23-ல் அனைத்து தெருக்களிலும் மழைநீர் கால்வாய்க்காகப் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஆனால், அவை இன்னும் முழுமை பெறவில்லை. ஆங்காங்கே சாலை சந்திப்புகளில் பணி முழுமைபெறாமல் திறந்தபடியே விடப்பட்டுள்ளது. பெரும்பாலும் மின் கம்பங்கள், மின் இணைப்பு பெட்டிகள் உள்ள பகுதிகளில் இவ்வாறு விடப்பட்டுள்ளன.

பணி முடிவடையாமல் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி, கொசுக்கள் பெருகும் பகுதியாக மாறியுள்ளது. மழைநீர் கால்வாய் பணி முடிவடையாததால் ஆங்காங்கே தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன.

சமூக விரோதிகளால் மின் உபகரணங்கள் திருடப்பட்டதால்
காலியாக உள்ள மின் இணைப்பு பெட்டி.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்நிலத்தடி மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகளை மின்வாரியம் மேற்கொண்டது. தடிமனான மின்சார கேபிள்கள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு ஆங்காங்கே இணைப்பு பெட்டிகள் வைக்கப்பட்டன. அந்த பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டன.

புல்டோசர் மூலம்பள்ளம் தோண்டும்போது, ஏற்கெனவே பதிக்கப்பட்ட மின்சார கேபிள்கள் ஆங்காங்கே பிடுங்கி எரியப்பட்டன, இணைப்பு பெட்டிகள் பெயர்ந்து விழுந்தன. தற்போது எஞ்சியுள்ள இணைப்பு பெட்டிகளில் இருந்த விலையுயர்ந்த மின்சார உதிரி பாகங் களை சில சமூக விரோதிகள் திருடிச்சென்றுவிட்டனர். எனவே நிலத்தடிமின் இணைப்பு வழங்குவதும் தற்போது கேள்விக் குறியாக உள்ளது.சீரற்ற முறையிலான மின் விநியோகம்,அடிக்கடி மின்தடை ஏற்படுவது இப்பகுதியில் வாடிக்கையாக உள்ளது.

மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டும் போது
பெயர்த்து வீசப்பட்ட மின் இணைப்பு பெட்டி.

புழல் குடிநீர் கிடைப்பதில்லை: புழல் ஏரியிலிருந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் பெரும் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில், புழல் பகுதிக்கு புழல் ஏரி நீர் கிடைப்பதில்லை. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு, வீடுகளுக்கே குடிநீர் இணைப்பு வழங்க குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால், 10 ஆண்டுகள் கடந்த பிறகும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. அனைவரும் நிலத்தடி நீர் அல்லது கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலையே உள்ளது.

புழல் காவாங்கரையில் 30 அடி அகலம் கொண்ட முக்கிய நுழைவு
சாலை 18 அடியாக சுருங்கி காணப்படும் பகுதி.

போக்குவரத்து நெரிசல்: புழல் காவாங்கரை பகுதியில் ஊருக்குள் வரும் பிரதானநுழைவு சாலை சுமார் 30 அடிஅகலம் கொண்டது. எனினும், இங்குகோயில் அமைந்திருப்பதால், கோயிலை ஒட்டி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் விரிவாக்கம் செய்யப்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடை பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில், இங்கு அப்பணிகள்தொடங்கப்படவே இல்லை. வீடுவீடாககுப்பை சேகரிக்கப்பட்டும் சிலரின்பொறுப்பற்ற தன்மையால் ஆங்காங்கே தெருக்களில் குப்பைதேங்கி சுகாதாரமற்ற நிலைமை ஏற்படுகிறது.

சுந்தர்

இதுகுறித்து 23-ம் வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டவரும், அதிமுக பிரமுகருமான சுந்தர் கூறும்போது, “இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர்வடிகால்வாய்கள் சீரான உயரத்தில் அமைக்கப்படவில்லை. சில இடங்களில் உயரமாகவும், சில பகுதிகளில் தாழ்வாகவும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் சீராகச் செல்லமுடியவில்லை.

புழல் சிறைச்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், இப்பகுதி மழைநீர் வடிகால் வழியாக புழல் உபரிநீர் கால்வாயில் கலக்கும் வகையில் அனுப்பப்படுகிறது. இங்கு ஏற்கெனவே வடிகால் சரியாக அமைக்கப்படாததால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்குகிறது. மேலும் ஆங்காங்கே முடிக்கப்படாமல் உள்ள பகுதிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது.

போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இந்தப் பகுதிக்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதியைச் சுற்றிலும் உள்ள சுவரைக் குறிப்பிட்ட சில பகுதிகளில் இடித்து அந்த நகர் சாலைகளையும், இங்கு ஏற்கெனவே உள்ளசாலைகளையும் இணைத்தால் போக்குவரத்து சீராக வாய்ப்பு உள்ளது” என்றார்.

ப.ராஜன்

பெருநகர சென்னை மாநகராட்சி 23-வது வார்டு கவுன்சிலர் ப.ராஜன் கூறும்போது, ``மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதில் சில பொறியியல்குறைபாடுகள் இருப்பது உண்மைதான். அதனால் சில இடங்களில் தண்ணீர் சீராக செல்வதில் பிரச்சினை உள்ளது.

அந்த குறைபாட்டை முற்றிலும் சரிசெய்ய முடியாவிட்டாலும், மாற்று வழிகளை முயன்று வருகிறோம். 5 முதல் 6 இடங்களில் மின் கம்பங்கள் உள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால்பணிகள் முடிவடையாமல் உள்ளன. மின்வாரிய அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்கள் போதிய மின்கம்பங்கள் இல்லை எனக் கூறினர். விரைவில்அந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைநீர் வடிகால் பணிகள் `வரமாசாபமா' என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த பணிகளின்போது ஏற்கெனவே வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக பதிக்கப்பட்ட குழாய்களில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதையும் சீர்செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். புழல் ஏரியிலிருந்து ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை புழல் பகுதிக்கு விநியோகிக்க அனுமதி கிடைத்துள்ளது.

அதேபோல தரைவழி மின் இணைப்பு வழங்கத் தேவையான கேபிள்கள், இணைப்பு பெட்டிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையும் சீர்படுத்த வேண்டியுள்ளது. பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. காவாங்கரை நுழைவுப் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதாளச் சாக்கடை பணிகளும் விரைவில் இங்கு தொடங்கவுள்ளன'' என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x