Published : 11 Jul 2024 02:19 PM
Last Updated : 11 Jul 2024 02:19 PM
சென்னை: “எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை. அவர் எந்த கட்சியைச் சார்ந்திருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது. இதனை கண்டிக்கிறேன்.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "வீரன் அழகுமுத்துக்கோன் வாழ்க்கை சரித்திரம் பாட புத்தங்களில் இடம்பெற வேண்டும். முதல்வர் அழகுமுத்துக்கோனுக்கு மரியாதை செலுத்துவது சந்தோசம். அதேநேரம் அவரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்க வழிவகை செய்ய வேண்டும்.
அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மேல் ஏறிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் பல பேய்கள் இருக்கின்றன. இந்த வேதாளம் வந்திருப்பது பேய்களை ஓட்டுவதற்கு தான். ஒவ்வொரு பேயாக ஓட்டிவருகிறேன். தற்போது இந்த பேயை ஓட்டிவிட்டு அடுத்த அந்தப் பேயை ஓட்ட வருகிறேன்.
தமிழக மக்களை பிடித்த பீடைகளைப் போல இந்த பேய்கள் உள்ளன. 70 ஆண்டுகளாக வளர்ச்சி இல்லாமல் இருப்பதற்கு இவர்கள் தான் காரணம்.
செல்வப்பெருந்தகையை ‘முன்னாள் ரவுடி’ என்று நான் சொன்னது உண்மை. அதற்கான தரவுகளை வெளியிட்டுள்ளேன். குண்டர் சட்டத்தில் தான் கைது செய்யப்படவில்லை என அவர் சொல்லவில்லையே. இதை கூறியதற்கு காங்கிரஸ் பிரமுகர்களே என்னை வாழ்த்துகின்றனர்.
சாட்டை துரைமுருகன் கைதுக்கு எனது கண்டனங்கள். சும்மா அவரை கைது செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தமிழகத்தில் கூலிப்படைகள், ரவுடிகள் அட்டூழியத்துக்கு எதிராக காவல்துறை தங்களது வீரத்தை காண்பிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை. அவர் எந்தக் கட்சியை சார்ந்திருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது. இதனைக் கண்டிக்கிறேன். காவல்துறையினர் திமுகவின் ஏவல்துறையாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை. மக்கள் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT