Published : 11 Jul 2024 02:10 PM
Last Updated : 11 Jul 2024 02:10 PM

“தொடர் தோல்விக்கு பின்னரும் பாடம் கற்காத பாஜக அரசு” - தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

தருமபுரி: ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், “தொடர் தோல்விக்குப் பின்னரும் பாஜக அரசு பாடம் படிக்கவில்லை” எனக் கூறினார்.

ஊரகப் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசின் 'மக்களுடன் முதல்வர்' திட்ட தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்தது. முதல்வர் ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, மாநில அளவில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

பின்னர், தருமபுரி மாவட்டத்தில் முடிவுற்ற ரூ.444.77 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், 2 ஆயிரத்து 637 பயனாளிகளுக்கு ரூ.56.04 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் வழங்கினார்.

முன்னதாக விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பொதுமக்களின் கோரிக்கைகள் எதுவும் அரசியல் பார்வையிலிருந்து தவறிவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக, மக்களிடமிருந்து மனுக்கள் பெறும் திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை இத்துறையின் கீழ் தமிழகத்தில் 68 லட்சத்து 30 ஆயிரத்து 251 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 66 லட்சத்தில் 25 ஆயிரத்து 624 மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனை ரூ.51 கோடியில் தரம் உயர்த்தப்படும். தருமபுரி நகரில் ரூ.38 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி ஊராட்சிகளை இணைத்து அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். முன்னாள் முதல்வர் காமராஜர் வருகை தந்த பாளையம்புதூர் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 4 வகுப்பறைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். இவை உட்பட தருமபுரி மாவட்டத்துக்கு 15 புதிய அறிவிப்புகள் இன்று வெளியாகும்.

தமிழகத்தில் தொடர் தோல்வியை சந்தித்த பிறகும் பாஜக தலைமையிலான மத்திய அரசு பாடம் படிக்கவில்லை. விருப்பு, வெறுப்புகளைக் கடந்து அனைவருக்குமான அரசாக செயல்பட வேண்டும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருப்பதே எங்கள் வெற்றியின் ரகசியம்” எனக் கூறினார்.

இதைத்தொடர்ந்து, மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்காக தற்போது இயங்கி வரும் பேருந்துகளுக்குப் பதிலாக 20 புதிய நகர பேருந்துகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில், வேளாண் மற்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, தருமபுரி மக்களவை உறுப்பினர் ஆ.மணி, எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x