Last Updated : 11 Jul, 2024 01:28 PM

5  

Published : 11 Jul 2024 01:28 PM
Last Updated : 11 Jul 2024 01:28 PM

“குடியரசு என்பதன் பொருள் இப்போதுதான் புரிகிறது” - ராமதாஸ் விமர்சனம்

ராமதாஸ்

விழுப்புரம்: இந்தியக் குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது. குடியரசு என்றால் மக்களை குடிக்கத் தூண்டும் அரசு. குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கும் அரசு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அத்துமீறலையும், தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தையும் கடந்து பாமக வெற்றி பெறும். பாமகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், களப்பணியாற்றிய பாமக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுக்கும் நன்றி. கப்பியாம்புலியூரில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தொரவியில் டிஎஸ்பி ஒருவர் பாமகவினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.

காவல்துறையினர் திமுகவினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையும் கடந்து பாமக 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும். தமிழகத்தில் அரசியல் படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலை உருவாகியுள்ளது. சென்னையில் காவல் அதிகாரிகள் பணிமாறுதல் செய்யப்பட்டது மட்டும் போதுமானதல்ல. நடந்த கொலைகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை உள்துறை மற்றும் காவல்துறையினருடன் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்தவேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதியில் உள்ள காவல் அதிகாரிதான் அதற்கு பொறுப்பு என அறிவிக்கவேண்டும்.

சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு காவல் அலுவலர்கள் பற்றாக்குறையை சரிசெய்யாமல் இருப்பதும் ஒரு காரணம். இரண்டாம் நிலை காவலர் முதல், தலைமைக் காவலர் வரை 1.10 லட்சம் பேர் தான் தற்போது பணியில் உள்ளனர். இன்னும் 40 ஆயிரம் காவல் பணியிடங்களை நிரப்பவேண்டும். 1 லட்சம் மக்களுக்கு 200 காவலர் வீதம் நியமிக்கப்பட வேண்டும். டிஎன் பிஎஸ்சி-க்கு புதிய தலைவரை நியமித்து இழந்த நம்பிக்கையை மீட்கவேண்டும்.

டிஎன்பிஸ்சி தலைவர் இல்லாமல் 25 மாதங்கள் செயல்படுவது நிர்வாக கோளாறு ஆகும். தற்போது 9 உறுப்பினர்கள் உள்ளனர். பொறுப்பு தலைவர் முனியநாதன் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். எனவே புதிய தலைவரையும், காலியாக உள்ள 7 உறுப்பினர்களையும் உடனே நியமிக்கவேண்டும்.

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும். இதனை திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும். கள்ளகுறிச்சி, மதுரை சிங்காநல்லூர் கொலைகளுக்கு மதுதான் காரணம். இந்திய குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது. குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு. குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கும் அரசு.

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் பணியை சரியாக செய்யாமல் இருக்கும் அதிகாரியை ஓராண்டுக்கு பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் உளவுத்துறை எங்கே உள்ளது? காலையில் உளவுத்துறையின் தலைவர் முதல்வருக்கு, முந்தைய நாள் நிகழ்வை விவரிப்பார். தற்போது இதை யாரிடம் சொல்வது என்று அதன் தலைவருக்குப் புரியவில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது” என்றார். பேட்டியின் போது பாமக மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x