Published : 11 Jul 2024 04:55 AM
Last Updated : 11 Jul 2024 04:55 AM

ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்: ஸ்டாலின் இன்று தொடக்கம்

கோப்புப் படம்

சென்னை / தருமபுரி: ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மூலம் இதுவரை 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இத்திட்டம் மூலம், தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளில் 2,500 முகாம்கள் நடத்தப்பட்டு, அதன்மூலம், 15 அரசுத் துறைகளின் 44 சேவைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றன.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

நெடுஞ்சாலை, பொதுப்பணி, பால் வளம், வனம், ஆதிதிராவிடர் நலன், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட துறைகள் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். அரசின் பல்வேறு துறைகள்சார்பில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் 2,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

மகளிர் விடியல் பயண திட்டத்துக்காக, தருமபுரி மாவட்டத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் பேருந்துகளுக்கு மாற்றாக 20 புதிய நகரப் பேருந்துகளின் இயக்கத்தையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று தனி விமானம் மூலம் சேலம் செல்கிறார். அங்கிருந்து காரில், தருமபுரி சென்று திட்டத்தை தொடங்கிவைக்கிறார். நிகழ்ச்சிகள் முடிந்ததும், இன்று மதியம் சென்னை திரும்புகிறார். சேலத்துக்கு புறப்படும் முன்பாக,சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

தருமபுரியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் தொடங்கப்படுவதை முன்னிட்டு, பல்வேறு அரசுத் துறைகளின் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனடி தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x