Published : 06 May 2018 08:07 AM
Last Updated : 06 May 2018 08:07 AM
வறுமை காரணமாக நீட் தேர்வு எழுத எர்ணாகுளத்துக்கு செல்ல வழியின்றி தவித்த 2 மாணவிகள் உட்பட 3 பேர், ஸ்ரீரங்கம் பூ வியாபாரி மற்றும் சமூக ஆர்வலர் அளித்த உதவியால் நேற்று காலை எர்ணாகுளத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
திருச்சியில் தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருபவர் மோகன். அதேபோல், ஸ்ரீரங்கத்தில் பூ மற்றும் நெய் வியாபாரம் செய்து வருபவர் கனகராஜ் (56).
“வெளி மாநிலங்களில் நீட் தேர்வுக்கு செல்ல விரும்பும் மாணவ- மாணவிகள் உதவி தேவைப்பட்டால் என்னை அணுகலாம்” என்று சமூக வலைதளத்தில் 2 நாட்களுக்கு முன் மோகன் பதிவு செய்திருந்தார். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை திருச்சியைச் சேர்ந்த நித்தீஷ், ராஜேந்திரன் ஆகிய 2 மாணவர்கள் அவரை அணுகி, தலா ரூ.2,500 பெற்றுக்கொண்டு எர்ணாகுளத்துக்கு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சக்தி முருகன், நேற்று காலை மோகனைத் தொடர்பு கொண்டு எர்ணாகுளம் செல்ல உதவி கோரினார். இதையடுத்து, மோகன் அங்கு சென்று சக்தி முருகனுக்கு ரூ.2,500 கொடுத்து உதவினார். அந்த நேரத்தில் பெல் பகுதியைச் சேர்ந்த பிலவேந்திரன் மகள் ஜெஸ்லின், மோகனைத் தொடர்பு கொண்டார். அதற்கு, மேல சிந்தாமணி பகுதிக்கு வருமாறு மோகன் கூற, ஜெஸ்லினோ, தனது தோழியும், புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசனின் மகளுமான மித்ரஜோதியையும் உடன் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.
தொலைக்காட்சியில் இதுபற்றிய செய்தியைப் பார்த்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பூ- நெய் வியாபாரியுமான கனகராஜும் அங்கு வந்தார். அவர், 3 பேருக்கும் தலா ரூ.10,000 வழங்கியதுடன், தனது சொந்த காரில், மூவரையும் எர்ணாகுளத்துக்கு அனுப்பி வைத்தார். இது, மாணவ, மாணவிகளுக்கு மட்டுமன்றி அவர்களது பெற்றோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மாணவ, மாணவிகள் 3 பேரும் தங்கள் தந்தையுடன் காரில் எர்ணாகுளம் புறப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT