Published : 11 Jul 2024 06:01 AM
Last Updated : 11 Jul 2024 06:01 AM

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட வழக்கு: நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பியுள்ளதாகக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரூ. 1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பாஜக மாநில தலைவரான அண்ணாமலையை தொடர்புபடுத்தி திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தில் தனக்கு எதிராக அவதூறு பரப்பியுள்ளதாகக் கூறி திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக ரூ. 1 கோடி மான நஷ்டஈடு கோரி அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், எந்தவொரு ஆதாரமுமின்றி தனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான அவதூறான குற்றச்சாட்டுகளை ஆர்.எஸ்.பாரதி சுமத்தியுள்ளார். இதனால் தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்துள்ளதால் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கும் வகையில் மானநஷ்ட ஈடாக ரூ. 1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இதற்காக அண்ணாமலை நேற்று சைதாப்பேட்டை 17-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா ஆனந்த் முன்பாக ஆஜரானார். அவருடன் பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் வணங்காமுடி, டி.ராஜா, ஏ.மோகன்தாஸ், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை பரிசீலித்து விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கள்ளக்குறிச்சி உயிரிழப்புக்கு என்னுடைய கூட்டுச்சதியே காரணம் எனக் கூறியுள்ளார். அவரது பேச்சு எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அதனால் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதியை நாங்கள் சிறைக்கு அனுப்புவோம். அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரையிலும் யார் மீதும் அவதூறு வழக்கு போடவில்லை. ஆனால் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லை தாண்டி சென்றுவிட்டது. அவர் என்னை சின்னப்பையன் எனக் கூறியிருந்தார். இந்த சின்னப் பையன் என்ன செய்யப்போகிறார் என்பதை அவர் பார்க்கத்தான் போகிறார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் தான் அனைத்து உண்மைகளும் வெளியே வரும். இதேபோல ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கோரும்போது அதற்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடுவது ஏன் என்பதையும், அதில் என்ன மர்மம் உள்ளது என்பதையும் முதல்வர் தான் கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x