Published : 10 Jul 2024 09:57 PM
Last Updated : 10 Jul 2024 09:57 PM

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்: மத்திய இணை அமைச்சருக்கு நிவாரணம் வழங்க நீதிபதி மறுப்பு

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணையமைச்சரான ஷோபா கரந்த்லாஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மத்திய இணை அமைச்சரான ஷோபா கரந்த்லாஜே மீது மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்த்லாஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். ஹரிபிரசாத் ஆஜராகி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைக்க வேண்டுமென கோரினார்.அதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அவ்வாறு தள்ளி வைப்பதாக இருந்தால் மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமென கோரினார்.

இந்த வழக்கில் மனுதாரருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதி, அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தமிழகத்தில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது அவருக்கு முன்னதாகவே தெரிந்திருக்கும் பட்சத்தில், பொறுப்புள்ளவராக முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் அளித்து இருக்கலாமே? என கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x