Published : 10 Jul 2024 09:21 PM
Last Updated : 10 Jul 2024 09:21 PM
ஓசூர்: ஓசூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மின்கம்பி உரசி தீப்பற்றியதில், அந்த லாரியில் இருந்த 40 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியில், கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் 40 இருசக்கர வாகனங்களை, வெளி மாநிலங்களுக்கு மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்றது. அந்த கன்டெய்னர் லாரி ஓசூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, போடிச்சிப்பள்ளி எனும் இடத்தில், சாலை மீதிருந்த மின் கம்பியில் கன்டெய்னர் லாரி உரசியது. இதனால், தீப்பற்றி லாரியில் இருந்து புகை வந்தது.
இதனை சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கவனித்து, கன்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் தெரிவித்தனர். இதையடுத்து லாரி ஓட்டுநர், லாரியை நிறுத்தி பார்த்த போது, லாரியில் தீ பற்றி அதில் இருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, லாரியின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைப்பதற்கு நீண்ட நேரம் போராடினர். அதற்குள் லாரியில் இருந்த 40 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
தீ விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT