Last Updated : 10 Jul, 2024 06:46 PM

 

Published : 10 Jul 2024 06:46 PM
Last Updated : 10 Jul 2024 06:46 PM

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் சபாநாயகர் தனபால் சாட்சியம்

தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துவிட்டு வெளியே வந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் |  படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இன்று (ஜூலை 10) சாட்சியம் அளித்தார்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001- 2006 வரை அதிமுக. ஆட்சிக் காலத்தில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.26 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2006-ல் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 3-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஐயப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய தமிழக சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் அனுமதி அளித்தார். இதனால் தனபாலும் இந்த வழக்கில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தனபால் இன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x