Published : 10 Jul 2024 06:17 PM
Last Updated : 10 Jul 2024 06:17 PM
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், இன்று திருமணம் முடித்த புதுமண தம்பதியர் திருமண கோலத்தில் வந்து தங்களது வாக்குரிமையை செலுத்தினர்.
விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் அஜித் குமார் (28). இவர் பெங்களூருவில் கார்கோ கம்பெனி நடத்தி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் சந்தியா, (27) இருவருக்கும் இன்று (ஜூலை 10) திருவண்ணாமலை கோயிலில் திருமணம் நடந்தேறியது. இதையடுத்து, திருமணம் முடிந்த கையோடு பிற்பகல் 12 மணி அளவில் விக்கிரவாண்டிக்கு வந்த இந்தத் தம்பதியர், கப்பியாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “ஜனநாயக கடமையான தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். எங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தவுடன் முதன்முதலாக இருவரும் மகிழ்ச்சியுடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளோம்” என்றனர்.
இதேபோல ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த தேவகி என்பவருக்கு அன்பரசன் என்பவருடன் இன்று காலை புதுச்சேரியில் திருமணம் நடைபெற்றது. இவர்களும் திருமணம் முடிந்த கையோடு திருமணக் கோணத்தில் விக்கிரவாண்டிக்கு திரும்பினர். இதனைத் தொடர்ந்து ஆசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மணமகள் தேவகி தனது வாக்கைச் செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேவகி, “திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதே போல் எல்லோரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுமெனவும்” கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT