Published : 10 Jul 2024 05:05 PM
Last Updated : 10 Jul 2024 05:05 PM
சென்னை: “தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர மற்ற யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அதுதான் இயக்கத்துக்கு சிறப்பானதாகும். தமிழகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர மற்ற யாருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை. இங்கு தினந்தோறும் 4 கொலைகள் நடந்தேறி வருகிறது. இந்தக் கொலைகளை செய்வது 20 வயதுக்குட்ப்பட்ட இளைஞர்களாக உள்ளார்கள்.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், கஞ்சா, போதை கலாச்சாரத்தால், இளைஞர்கள் அடிமையாகி, கூலிப்படைகளாக மாறிவருவது வருத்தத்துக்குரியதாகும். சீர்கெட்டு கிடக்கும் சட்டம் - ஒழுங்கை, தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சென்னையில் மாநகர காவல் ஆணையரை மாற்றினால் மட்டும், எந்த விதமான மாற்றமும் வந்து விடாது. அண்மைக்காலமாக யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில், வெறும் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரத்துக்கு கொலை செய்கின்ற கேவலமான நிலைமை தமிழகத்தில் உள்ளது. எனவே, படிப்படியாக மது விலக்கை கொண்டு வந்தால்தான் மட்டும் தமிழகம் அமைதி பூங்காவாக மாறும்.
கர்நாடகாவில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. அவர்கள் காவிரியில் நீரும் வழங்க வில்லை, மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்துக்கு நீர் பெறுவதற்கான முயற்சியை, கர்நாடகா அரசிடம் பேசி, தமிழக முதல்வர் எந்த தீர்வையும் எட்டவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக ரூ. 1000, ரூ.2000 கொடுக்கு ஏழை, எளிய மக்களை விலைக்கு வாங்குகிறார்கள். அதையும் மீறி ஜனநாயகம், பணநாயகத்தை வெல்லும் என்பது எங்களுடைய விருப்பமாகும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT