Last Updated : 10 Jul, 2024 11:49 AM

 

Published : 10 Jul 2024 11:49 AM
Last Updated : 10 Jul 2024 11:49 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,521 கன அடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் 41.15 அடியாக உயர்வு

மேட்டூர் அணை | கோப்புப் படம்

மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 4,521 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கர்நாடக மாநில அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து கடந்த 4-ம் தேதி 1,223 கன அடியாகவும், 5-ம் தேதி 1,281 கன அடியாகவும், 6-ம் தேதி 1,465 கன அடியாகவும் இருந்தது. இது இன்னும் அதிகரித்து 7-ம் தேதி 2,832 கன அடியாகவும், 8-ம் தேதி 2,149 கன அடியாகவும், நேற்று 3,341 கன அடியாகவும் இருந்தது.

இந்நிலையில், நீர்வரத்து இரு மடங்காக அதிகரித்து இன்று காலை அணைக்கு வரும் நீரானது விநாடிக்கு 4,521 கன அடியாக உயர்ந்தது. இதனிடையே, காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தற்போது, அணையின் நீர்மட்டம் 40.59 அடியில் இருந்து 41.15 அடியாகவும், நீர் இருப்பு 12.39 டிஎம்சியில் இருந்து 12.69 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ள நிலையில் பிலிகுண்டுலு பகுதியில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x