Published : 10 Jul 2024 10:25 AM
Last Updated : 10 Jul 2024 10:25 AM

பள்ளிக்கரணையில் ஐடி நிறுவன கார் ஏரியில் கவிழ்ந்து விபத்து: செக்யூரிட்டி நீரில் மூழ்கி பலி

பள்ளிக்கரணை: பிரபல தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் கார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளிக்கரணை ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காக காரில் சென்ற பிஹாரைச் சேர்ந்த காவலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை இரவுப் பணி முடிந்ததும் அவர்களது வீட்டில் விடுவதற்கு அரியலூரைச் சேர்ந்த ராஜசேகர் (35) என்பவர் வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9)இரவு பணி முடித்துத் திரும்பிட ஊழியர்களை பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் அலுவலகம் திரும்பியுள்ளார்.

அப்போது நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் பல்லாவரம் துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து நாராயணபுரம் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் விபத்து குறித்து அருகில் உள்ள பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், ஏரியில் மூழ்கிய காரை பொக்லைன் இயந்திரம் மூலம் மேலே தூக்கினர்.

அப்போது, காரின் ஓட்டுநர் ராஜசேகர் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளார். அதே காரில் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்புக்காகச் சென்ற பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கௌசல்குமார் (27) பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுநர் ராஜசேகரை தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவலாளி கௌசல்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x